நாட்டுப் பூவரச மரத்திலிருந்து ஐந்து இலைகளைக் கிள்ளி, அவற்றுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து விஷக்கடி பட்ட இடத்தில் பூசி, சடச்சி அம்மன் கோயில் தீர்த்தத்தில் குளித்து வந்தால், எத்தகைய விஷமும் முறிந்துபோகும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள்.
பிரார்த்தனை
கோயில் தீர்த்தத்தில் குளித்து வந்தால், எத்தகைய விஷமும் முறிந்துபோகும் என்று சிலிர்ப்புடன் சொல்கிறார்கள் ஊர் மக்கள். பாம்பின் விஷக்கடி, தோல் நோய் முதலானவற்றுக்கும் அருமருந்தாகத் திகழ்கிறது சடச்சியம்மனின் விபூதிப் பிரசாதம்.
நேர்த்திக்கடன்:
வேண்டுதல்கள் நிறைவேறிய பக்தர்கள் இங்குள்ள அம்மனுக்கு காவடி எடுத்தும், கூழ் காய்ச்சி ஊற்றியும் தங்களது நேர்த்திக்கடனைச் செலுத்துகின்றனர்.
தலபெருமை:
சுமார் 400 வருடங்கள் பழைமையான அம்பாளின் கோயிலில் தைப்பொங்கல் ரொம்பவே விசேஷம்! பொங்கலன்று அம்மன் சன்னதிக்கு முன்பாக இரண்டு பெரிய பாத்திரங்களில் பொங்கல் வைப்பார்கள். ஒன்றில் மிளகு போடாமல், பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பு, தண்ணீர் ஊற்றி, வெண்பொங்கலும், மற்றொன்றில் பத்து படி அரிசியும், வெல்லமும் போட்டு சர்க்கரைப் பொங்கலும் தயாராகும். சூரிய உதயத்துக்கு முன் என்றில்லாமல், 10.30 மணியளவில் வைக்கப்படும் பொங்கல், மதியம் 2 மணியளவில் தயாராகிவிடும். பின்னர் 4 மணியளவில் ஊர் கூடி, சடச்சியம்மனுக்குப் பூஜைகள் செய்து, அவளுக்குச் சமர்ப்பித்த பொங்கலை அனைவருக்கும் விநியோகிப்பார்கள்.
தல வரலாறு:
சதுரகிரி மலைச்சாரலில் வையம்பாடி எனும் வளமான கிராமத்தில் வசித்த தொட்டியநாயக்கருக்கு ஒரு மகள் பிறந்தாள். குழந்தை சற்று வளர்ந்ததும், அந்தக் கால வழக்கப்படி பால்ய விவாகம் செய்து வைத்தார்கள். சிறுவனான அவளுடைய கணவன் மாடு மேய்த்து வந்தான். ஒருநாள், மேய்ச்சலுக்கு மாடுகளை ஓட்டிச்சென்றவன் அங்கேயே இறந்துபோனான். அவனைத் தகனம் செய்யும் தருணத்தில், தொட்டியநாயக்கர் மகளும் <உடன்கட்டை ஏறி, கன்னியாகவே தீயில் கருகிப்போனாள். பெற்றோர் அவளின் அஸ்தியைக் கொண்டு வந்து சிறு கோயில் அமைத்து, வழிபடத் துவங்கினார்கள். அவள், அந்த ஊரைக் காக்கும் தெய்வம் ஆனாள். இதுதான் சடச்சியம்மனின் திருக்கதை. வீரசின்னு என்றொரு திருநாமமும் இவளுக்கு உண்டு.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:பாம்பின் விஷக்கடி, தோல் நோய் நீங்குவதற்கு சடச்சியம்மனின் விபூதிப் பிரசாதம் அருமருந்தாகத் திகழ்வது இக்கோயிலின் தனிச்சிறப்பாகும்.
இருப்பிடம் : மதுரை மாட்டுத்தாவணியிலிருந்து சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ள கிராமம் யா. புதுப்பட்டி. இங்கே அரசமரத்தடியில் கோலாகலமாகக் கோயில் கொண்டிருக்கிறாள் சடச்சியம்மன்.