மூலவரும் அம்பாளும் ஒரே பிரகாரத்திற்குள் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். கல்வெட்டுகள் நிறைந்த ஸ்தலம். விநாயகர் இத்தலத்தில் வெளிபிராகாரத்தில் முக்கல விநாயகர் என்ற பெயரில் தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கிறார். மகாலெட்சுமி, மற்றும் சுப்ரமணியர் வள்ளி, தெய்வானையுடன் சேர்ந்து தனித்தனி சன்னிதியில் அமர்ந்து அருள்பாலிக்கின்றனர்.
பிரார்த்தனை
குடும்பத்தில் கணவன், மனைவி பிரச்சனை நீங்கி சகல செல்வங்களும் கிடைக்க, தொழிலில் மேன்மை அடைய, சகல தோஷங்களும் நிவர்த்தியாக இத்தலத்தில் பிரார்த்தனை செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
பிரார்த்தனை நிறைவேறியதும் மூலவர், அம்பாளுக்கு புது வஸ்திரம் சாத்தி, அபிஷேகம் செய்து வழிபாடு செய்கின்றனர்.
தல வரலாறு:
காவிரி பாய்ந்தோடி வளமடையச் செய்யும் தஞ்சை தரணியில் வானளாவிய கோபுரங்களுடன் அருள் வழங்கும் கோயில் ஏராளம் உள்ளன. அந்த வகையில், நாகை மாவட்டம், மயிலாடுதுறை, பூம்புகார் சாலையில் 4 கி.மீட்டர் தொலைவில் உள்ள கீழிருப்பு என்ற ஊரில் சோழர் காலத்தை சேர்ந்த நூற்றாண்டு பழமை மிக்க சிவன் கோயில் உள்ளது. இது சோழ மன்னர்களால் 12-ம் நூற்றாண்டு காலத்தில் கட்டப்பட்டது. இக்கோயிலில் தற்போது மூலவர் சிதம்பரேஸ்வரர்- சிவகாமி அருள்புரிந்து வருகிறார்கள்
தில்லை சிதம்பரத்தில் சிவனுக்கும், அம்பாளுக்கும் நடந்த நடனப்போட்டியில் சிவபெருமான் ஊர்த்துவ தாண்டவர் என்ற பெயரில், உக்கிரதாண்டவம் ஆடினார். ஒரு கட்டத்தில் தன்காலைத் தலையில் தூக்கி வைத்து ஆடிய சிவன், இவ்வாறே அம்பாளாள் செய்ய முடியுமா எனக்கேட்க, பெண்மைக்குரிய நாணம் உந்தித்தள்ள அம்பாளாள் முடியாமல் போனாது. இதனால் அம்பாள் தோல்வியுற்றார், இதனால் கோபமுற்ற அம்பாள் காவிரி பாய்ந்தோடி வளமடையச் செய்யும் மயிலாடுதுறை அருகிலுள்ள கீழிருப்பு கிராமத்தில் காவேரி ஆற்றங்கரையின் அருகில் அமர்ந்து சிவபெருமானை நோக்கி தவம் புரிந்தார். இதனை அறிந்த சிவபெருமான் விநாயகருடன் (முக்கல விநாயகர்) இங்கு வந்து கோபத்துடன் இருக்கும் அம்பாளை தில்லைக்கு அழைத்தனர். அம்பாள் வர மறுத்ததால் அம்பாளுடன் சேர்ந்து சிவபெருமானும், விநாயகரும் (முக்கால விநாயகர்) இவ்விடத்திலையே அமர்ந்து அருள்பாலித்ததாக ஐதீகம். சிவபெருமான் தில்லை அதாவது சிதம்பரத்திலிருந்து வந்ததனால் சிதம்பரேஸ்வரர் என்ற பெயரில் திருக்கோயில் உருவெடுத்தது. இக்கோயில் வரலாற்றில் இன்னொரு கதையும் கூறப்படுகிறது.
முன்னொரு காலத்தில் கீழிருப்பில் குதிரை வியாபாரி ஒருவர் இருந்தார். பூம்புகாரில் இருந்து குதிரைகளை வாங்கி வந்து இப்பகுதியில் வியாபாரம் செய்வது அவரது வழக்கம். ஒரு கட்டத்தில் அவருக்கு வியாபாரத்தில் இருந்து வந்த நாட்டம் குறைய ஆரம்பித்தது. பொருளாசையும் இல்லாமல் போனதால் துறவியாகி இறை பணியில் ஈடுபட்டார். அந்த ஊரில் உள்ள சிதம்பரேஸ்வரர் கோயிலில் தங்கி இறைவனுக்கு தொண்டு செய்து வந்தார். அப்பொழுது ஒரு நாள் நல்ல மழை பெய்து கொண்டிருந்தது. அந்த வழியே வண்டியில் மிளகு மூட்டைகளை கொண்டு வந்த வியாபாரிகள் சிலர் சிதம்பரேஸ்வரர் கோயிலில் மழைக்காக ஒதுங்கி நின்றனர். மழை நிற்காமல் பெய்து கொண்டே இருந்ததால் இரவு கோயிலில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
கடுகாக மாறிய மிளகு: அந்த சமயம் துறவியான குதிரை வியாபாரி பிரசாதம் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது பிரசாதத்தில் சேர்க்க மிளகுத் தேவைப்பட்டது. இதை அங்குத் தங்கியிருந்து மிளகு வியாபாரிகளிடம் கூறி, பிரசாதத்திற்கு கொஞ்சம் மிளகுத் தர முடியுமா கேட்டார். வியாபாரத்திற்கு வைத்திருந்த மிளகை கொடுக்க மனம் இல்லாத வியாபாரிகள், அந்த துறவியிடம் எங்களிடம் மிளகு இல்லை, கடுகுதான் வைத்திருக்கிறோம் என்று பொய் கூறினர். பிறகு மழை நின்றதும் வியாபாரிகள் அனைவரும் தங்கள் மூட்டைகளை தூக்கி கொண்டு வியாபாரத்திற்கு புறப்பட்டு சென்றனர். சந்தைக்கு சென்றதும் அங்கே மூட்டைகளை அடுக்கி வைத்தனர். பின்பு வியாபாரத்திற்காக மூட்டையை திறந்து பார்த்தபோது அதில் மிளகிற்கு பதிலாக கடுகு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மிளகு இல்லாததால் அவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
மிளகு சித்தர்: துறவி ஒருவர் பிரசாதம் தயாரிக்க மிளகு கேட்டபோது, அதை கொடுக்காமல் கடுகு தான் இருக்கிறது என்று கூறி ஏமாற்றி வந்து விட்டோமே, அவர்தான் இதற்கு காரணம் என்பதை உணர்ந்த மிளகு வியாபாரிகள், உடனே கீழிருப்பு சிதம்பரேஸ்வரர் கோயிலுக்கு சென்று அங்குள்ள துறவியிடம் நடந்த சம்பவத்தை பற்றி கூறி பரிகாரம் கேட்டனர். அதற்கு துறவி, நீங்கள் சிதம்பரேஸ்வரரிடம் வேண்டிக் கொள்ளுங்கள். வியாபாரம் சரியாகும் என்று கூறினார். அதன்படி மிளகு வியாபாரிகள் அனைவரும் பிரசாதத்திற்கு மிளகு தராத தவறை உணர்ந்து சிதம்பரேஸ்வரரிடம் மன்னிப்பு வேண்டிக் கொண்டனர். சிதம்பரேஸ்வரரும் அவர்கள் வேண்டுதல்படி மீண்டும் மிளகு மூட்டைகள் கிடைக்குமாறு அருள்புரிந்தார். இந்த சம்பவத்திற்கு பிறகு வியாபாரத்தை விட்டுவிட்டு துறவியானவரை மிளகு சித்தர் என்றே அழைக்க ஆரம்பித்தனர். அன்று முதல் புதிதாக தொழில் தொடங்குபவர்களும், வியாபாரத்தில் நலிவடைந்த நிலையில் இருப்பவர்களும் இக்கோயிலுக்கு வந்து சிதம்பரேஸ்வரரை வணங்கி வழிபட்டு செல்கின்றனர். இக்கோயிலுக்கு சென்று திரும்பினால் வியாபாரத்தில் திருப்பம் ஏற்பட்டு நல்ல முறையில் நடப்பதாக கூறுகின்றனர்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:சூரிய பகவான் ஞாயிற்றுக்கிழமை காலை இத்தல மூலவரின் மீது ஒளி வீசி வணங்குவதாக ஐதீகம்.
இருப்பிடம் : மயிலாடுதுறை பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 4 கி.மீ ரயில்வே நிலையத்திலிருந்து 6 கி.மீ தூரத்தில் திருக்கோயில் அமைந்துள்ளது. பஸ், 12, 21, 34 மற்றும் மினி பஸ் வசதி 5 நிமிடத்திற்கு ஒரு முறை உள்ளது. பஸ் இறங்கும் இடம் மேலகஞ்சாநகரம் கிணற்றடி.