திருமயிலாடியில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி உற்சவம், மாதந்தோறும் கார்த்திகை விழா, ஆடிக் கிருத்திகை, வெள்ளித்தோறும் துர்க்கை வழிபாடு, புரட்டாசியில் நவராத்திரி விழா, பிரதோஷ வழிபாடு, மார்கழியில் ஆருத்ரா தரிசனம் உத்திர விழா என பல உற்வசங்கள் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
தல சிறப்பு:
இறைவி பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னிதிகள் அமைந்துள்ளது சிறப்பு. இங்குள்ள முருகனின் உற்சவ மூர்த்தமும் சிறப்பானவைதான். தேவ அசுரயுத்தம் முடிந்து சூரனாகிய மயில்மீது அமர்ந்தபடி குமரக்கடவுள் திருமயிலாடி தலத்தில் எழுந்தருளுகிறார்.
திறக்கும் நேரம்:
காலை 6 மணி முதல் 12.10 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8மணி வரை திறந்திருக்கும்.
முகவரி:
அருள்மிகு சுந்தரேஸ்வரர் திருக்கோயில்,
திருமயிலாடி,609 108
கொள்ளிடம் தாலுக்கா
நாகப்பட்டினம் மாவட்டம்.
போன்:
+91 97881 96206, 99440 76940
பொது தகவல்:
இத்தலத்தில் இறைவன் சுந்தரேஸ்வரர் என்ற திருபெயருடனும், உமாதேவி பிருகன் நாயகி என்ற திருப்பெயருடன் அருள்பாலித்து வருகின்றனர். குமாரவிநாயகர், பாலசுப்பிரமணியர், சித்தி விநாயகர், பத்மாசன கோல தட்சிணாமூர்த்தி, சிவகாமசுந்தரி சமேத நடராஜர், சனிபகவான், லிங்கோத்பவர் எனப் பல தெய்வங்கள் அருளும் இத்தலத்தின் விருட்சம், வில்வம். இக்கோயிலில் பால சுப்பிரமணியர் தவக்கோலத்தில் காட்சியளிக்கிறார். சூரபத்மனாகிய ஆணவ மயில் முருகன் பாதத்தில் பாதரட்சையாக தன்னுடைய முகத்தை வைத்துக் கொண்டிருக்கிறது. இடதுகால் பெரு விரலுக்கும், அடுத்த விரலுக்கும் இடையே தலையைத் தூக்கி முருகப்பெருமான் திருமுகத்தை பார்த்தவண்ணம் தோற்றமளிக்கிறது. மற்றொரு பாதத்தில் பாதரட்சை காணப்படுகிறது.
பிரார்த்தனை
இக்கோயிலில் வடதிசை நோக்கியவாறு அருளும் முருகனை தென்முகமாக நின்று வழிபட்டால் பில்லி, சூன்யம், பெரும்பகை அழியும் என்கிறார்கள். ஊழ்வினையால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த முருகனை வழிபட்டால், இன்னல்கள் மறைந்து இன்ப வாழ்வு தொடரும் என்பது நம்பிக்கை.
நேர்த்திக்கடன்:
பக்தர்கள் தங்களது வேண்டுதல் நிறைவேறியவுடன் முருகனுக்கு பாலபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்து வேண்டுதல் நிறைவேற்றுகின்றனர்.
தலபெருமை:
அக்காலத்தில் இக்கோயிலில் திருப்பணி நடந்துகொண்டிருப்பது பிருகன்நாயகி சிலையில் விரல்பகுதி உடைந்துவிட, அந்த சிலையை அப்படியே வைத்துவிட்டு, வேறு பதிய சிலையை வடித்து பிரதிஷ்டை செய்ய தயாராகியிருக்கின்றனர். அப்போது ஒருநாள் கோயில் திருப்பணியில் ஈடுபட்டிருந்தவர் அனைவரது கனவில் ஒரே நேரத்தில் தோன்றிய பிருகன் நாயகி, உனது தாய்க்கு வயதானாலோ, உடல்நிலை சரியில்லை என்றாலோ ஒதுக்கி வைத்துவிடுவாயா? அல்லது அவளுக்குப் பதில் வேறு தாயை ஏற்றுக் கொள்வாயா? என்னை ஏன் மாற்றுகிறாய்? என்று கேள்வி எழுப்பியதோடு, எனக்கும் இந்த கோயிலில் சன்னதி அமைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டதன்படி இரண்டு சன்னதிகள் அமைக்கப்பட்டுள்ளன. சிங்கத் தீவில் பத்மாசுரன் என்ற அரக்கன் கொடுங்கோலாட்சி புரிந்துவந்தான். அவன் தேவர்களை துன்புறுத்தி வந்ததால் கோபம் கொண்ட முருகப்பெருமான் தனது படைகளுடன் சென்று பத்மாசுரனுடன் போர் புரிந்தார். முருகப்பெருமானை எதிர்த்துப் போரிட முடியாத பத்மாசுரனோ அவரை வஞ்சனையால் வீழ்த்த எண்ணி, அபிசாரவேள்வியை தொடங்கினான். அப்போது வேள்வித் தீயிலிருந்து ஜுர தேவதை வெளிப்பட்டு தேவர்ப்படையை கடுமையான வெப்ப நோயினாலும், வைசூரியாலும், சுர நோயாலும் வாட்டியிருக்கிறாள். இதனைக் கண்ட முருகக் கடவுள் திருமயிலாடி தலத்தில் வடதிசை நோக்கி தவம் செய்து சீதளாதேவியை வருவித்தார். அவள் ஜுர தேவதையுடன் சண்டையிட்டு வென்று அவளை முருகனிடம் ஒப்படைத்தாள். இதன் பின்னர் தேவர்கள் சோர்வு நீங்கி உற்சாகம் பெற்று மீண்டும் போரிட்டு பத்மாசுரனை வென்றனர். தேவர் தலைவனாகிய இந்திரன், முருகப்பெருமானை இதே தலத்தில் தவக்கோலத்தில் இருக்குமாறு வேண்டி, அவ்வாறே பிரதிஷ்டை செய்து வழிபட்டான். ஆணவ மலத்தின் வடிவாகிய சூரன், மயிலாக நின்று அவரை தாங்குகின்றான். ஆணவ மலத்தை அழிக்க முடியாது அடக்கத்தான் முடியும். அடங்கியிருந்தாலும் ஆணவமானது அவ்வப்போது தன்னுடைய குணத்தை காட்டிக் கொண்டுதான் இருக்கும். இத்தத்துவத்தை உணர்த்துவதுபோல் திருமயிலாடி உற்சவமூர்த்தியின் வடிவம் அமைந்துள்ளது.
தல வரலாறு:
ஒரு சமயம் திருக்கயிலையில் பார்வதி தேவியை சீண்டிப் பார்க்க நினைத்த சிவபெருமான், இணையில்லாத பேரழகு வடிவானவன் நான்தான் என்கிறார். உமாதேவியோ, இல்லையில்லை. நானே அழகில் சிறந்தவள் என்று பதில் கூறுகிறார். யார் அழகு? என்ற விவாதம் தொடர ஒரு கட்டத்தில் சிவபெருமான் கோபமாகி மறைந்து போகிறார். பெருமானைக் காணாது தவித்த உமாதேவி, அய்யோ, தவறு செய்து விட்டோமே! என்று வருந்துகிறாள். எம்பெருமானை எப்படி வரவழைக்க வேண்டும் என்ற வித்தை தெரிந்த உமாதேவி, உடனே அழகிய மயில் வடிவம் எடுத்து, கண்ணுவாச்சிபுரம் என்ற திருத்தலத்திற்குச் சென்று சிவனை துதித்திருக்கிறாள். அப்போது அழகிய கோலத்தில் சுந்தரமகாலிங்கமாக காட்சியளித்திருக்கிறார், சிவபெருமான். சிவனின் சுந்தரவடிவம் கண்ட உமாதேவி உச்சிக்குச் சென்று மயில்வடிவாக மாறி தனது தோகையை விரித்து ஆனந்த நடனம் ஆடினாள். அது முதல் இந்த தலம் திருமயிலாடி எனப் பெயர் பெற்றிருக்கிறது. கண்ணுவ மகரிஷி யோகசாதனை செய்த தலம் என்பதால் இந்த ஊர் கண்ணுவாச்சிபுரம் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டிருக்கிறது.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:இறைவி பிருகன் நாயகிக்கு இரண்டு சன்னிதிகள் அமைந்துள்ளது சிறப்பு. இங்குள்ள முருகனின் உற்சவ மூர்த்தமும் சிறப்பானவைதான். தேவாசுரயுத்தம் முடிந்து சூரனாகிய மயில்மீது அமர்ந்தபடி குமரக்கடவுள் திருமயிலாடி தலத்தில் எழுந்தருளுகிறார்.
இருப்பிடம் : சிதம்பரம்- சீர்காழி செல்லும் சாலையில் கொள்ளிடத்தை அடுத்து புத்தூர் என்ற கிராமத்திலிருந்து கிழக்கே ஒரு கிலோமீட்டர் தூரத்தில் இந்த கோயில் அமைந்துள்ளது. சிதம்பரத்திலிருந்து 16 கி.மீ. சீர்காழியிலிருந்து 10 கி.மீ.