ஆண்டுதோறும் இக்கோயிலில் சித்திரை மாதம் பவுர்ணமி திருவிழா 12 நாள் நடைபெறும். சிறப்பு வாய்ந்த 9-ம் நாள் திருவிழாவில் காவடி, தேரோட்டம், தீமிதி உற்சவமும்; 10-ம் நாள் திருவிழாவாக தீர்த்தமும், 11-ம் நாள் திருவிழாவாக தெப்பமும் நடைபெறுகிறது. தேரோட்டத்தில் சுமார் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுப்பது கண்கொள்ளாக் காட்சியாகும். நூற்றுக் கணக்கான பக்தர்கள் சித்திரா பவுர்ணமி திருவிழாவிற்கு வெளியூர்களில் இருந்து மாலை போட்டு நடைப்பயணமாக வந்து காவடி, பால்குடம் எடுப்பார்கள்.
தல சிறப்பு:
விநாயகருக்கென அமைந்த தனி கோயில்களில் இது முக்கியமானது.
திறக்கும் நேரம்:
காலை 7 மணி முதல் 10 மணி வரை, மாலை மணி 4.30 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
இக்கோயிலில் சில பக்தர்கள் திருமணப் பொருத்தம் மற்றும் சில நல்ல காரியங்களுக்கு விடியற்காலையில் கவுளி (பல்லி சொல்) கேட்பதற்காவே வந்து செல்வார்கள். கிழக்கு நோக்கிய இந்த கோயிலில் பக்தர்கள் தங்குவதற்கு வசதியாக மண்டபங்களும் உள்ளன. கோயிலின் பின்பிறம் தல விருட்சமாக அரசும், வேம்பும் இணைந்து கம்பீரமாக காட்சி தருகிறது.
பிரார்த்தனை
காரியங்களில் தடை ஏற்பட்டால் இங்கு வழிபாடு செய்யப்படுகிறது.
நேர்த்திக்கடன்:
விநாயகருக்கு அபிஷேகம் செய்து பிரார்த்தனை நிறைவேற்றப்படுகிறது.
தலபெருமை:
முகூர்த்த நாட்களில் இங்கு ஏராளமான திருமணங்களும் நடக்கின்றன. பேராவூரணியில் அநேகமாக வீட்டுக்கு ஒரு குழந்தைக்காவது நீலகண்டன், நீலவேந்தன், நீலா, நீலவேணி என்று முதல் எழுத்து நீ என பிள்ளையாரை நினைத்து பெயர் சூட்டுவது வழக்கமாக உள்ளது. மேலும் பெண்கள் வெள்ளிக்கிழமைதோறும் கோயில் மண்டபத்தில் இரவு தங்கியிருந்து காலையில் திருக்குளத்தில் நீராடி நீலகண்டபிள்ளையாரை வழிபடுவார்கள்.
தல வரலாறு:
தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் துளசி மகாராஜாவால் கட்டப்பட்டது, பேராவூரணியில் அமைந்துள்ள நீலகண்டபிள்ளையார் கோயில். ஆன்மிகத்தில் தீவிரப்பற்றுடைய துளசி மகாராஜாவுடைய நோயைக் குணப்படுத்தும் மருந்தைத் தேடி, அரசர் பரிவாரங்களோடு பேராவூரணிவழியாக ஆவுடையார் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தார். பேராவூரணியைக் கடந்தபோது சிவனடியார் இருவர் நீலகண்டபிள்ளையாருக்கு பூஜைகள் செய்துவருவதைப் பார்த்தார். அங்கு சென்று சிவனடியார்களைத் தொழுது, தன் அமைச்சரின் நோய் நீங்க திருநீறு தாருங்கள் என்று கேட்டார்.
அவர்களும் நீலகண்டபிள்ளையாரை வணங்கி, திருநீறு தந்தார்கள். அமைச்சரது உடலில் திருநீறைப் பூசிய அடுத்த நிமிடமே அவரது நோய் நீங்கியது. அதைக் கண்டு பரவசமடைந்த மன்னர், நீலகண்ட பிள்ளையாருக்கு நிலம் எழுதிக் கொடுத்து, அதில் கோயில் நிர்மாணிக்குமாறு கூறினார். பின்னர் ஒரு நாள் மன்னரின் கனவில் தோன்றிய நீலகண்டபிள்ளையார், தனக்குப் பழத்தோட்டம் வேண்டுமென்று கேட்டார். பேராவூரணியை அடுத்துள்ள நல்லமாங்கொல்லையில் ஒரு வேலி இடத்தை அளித்து, தோட்டம் அமைக்கச சொன்னார் அரசர். இங்கு மூலவராக நீலகண்ட பிள்ளையார் அருள்கின்றார்.
சிறப்பம்சம்:
அதிசயத்தின் அடிப்படையில்:விநாயகருக்கென அமைந்த தனி கோயில்களில் இது முக்கியமானது.
இருப்பிடம் : தஞ்சாவூர் மாவட்டத்தின் பட்டுக்கோட்டை அருகே பேராவூரணி புதிய பேருந்து நிலையம் அருகில் முடப்புளிக்காடு ஏந்தல் என்னும் இடத்தில் கோயில் கொண்டு அருள்பாலிக்கிறார் நீலகண்டபிள்ளையார்.