பதிவு செய்த நாள்
03
டிச
2019
12:12
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், வரும், 10ம் தேதி, கார்த்திகை மாத கிருத்திகை விழாவையொட்டி, மகா தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
அன்று அதிகாலை, 4:30 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்க கிரீடம் பச்சை மாணிக்க மரகத கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து, சிறப்பு தீபாராதனை நடத்தப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமானுக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி, தெய்வானையுடன் வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் வலம் வரும். அப்போது, மலைக்கோவில் எதிரே உள்ள, பச்சரிசி மலையில் மகா தீபம் ஏற்றப்படும். தொடர்ந்து, மாடவீதியில் சொக்கப்பனையில் தீபம் ஏற்றி வைக்கப்படும்.