விண் மீது பறந்த கருடன், கோடி நாம ஜபத்தில் இருந்த வேங்கடநாதன் முன் ஒரு விக்ரகத்துடன் காட்சியளித்தான். கருடபட்சியாக வந்தவன் தரை தொட்ட மாத்திரத்தில் கிரீட குண்டலத்துடன் கருட ராஜனாக இரு கைகளும் ஹயக்ரீவ விக்ரகத்தை பற்றியிருந்த நிலையில், ""நாராயண... நாராயண” என்றான். ஜபத்திற்காக கண்களை மூடியிருந்த வேங்கடநாதன் நாராயண நாமம் கேட்டு கண் திறக்கவும், எதிரில் கருடன் இருந்தான். அதுவும் கைகளில் ஹயக்ரீவ மூர்த்தியின் சுடர் விட்டு பிரகாசிக்கும் எழில் விக்ரகத்துடன்...!
கோடி ஜபம் முடிந்து பார்த்த முதல் காட்சியே எம்பெருமானின் வித்யா சொரூபம் தான்! சொரூபத்தை காட்டியபடியே கருடன்! வேங்கடநாதனின் கண்கள் இரண்டும் கசியத் தொடங்கின.
நெஞ்சிலும் விம்மிதம்! "பட்சி ராஜனே.. பரம தயாளனே... உனக்காக தவத்தில் ஆழ்ந்த எனக்கு கருணை செய்ய வந்து விட்டாயா?” எனக் கேட்டு உதடுகள் துடிதுடித்தன.
கருடனும் விக்ரகத்தை அருகிலுள்ள மேடை மீது வைத்தபடி, ""வேங்கடநாதனே! உன் ஜெபமானது வைகுண்டத்தைக் குடைந்து என் செவியில் புகுந்து இன்புறச் செய்தது. எம்பெருமானுக்கே ஆட்செய்யும் பரம பக்தனான நீ, எனக்காகவும் புரிந்த தவம் ஆச்சரியம் அளித்தது. தலை இருக்க வாலை அழைத்த உன் செயலின் நோக்கத்தைப் பூர்த்தி செய்ய வந்துள்ளேன்” என்றான் கருடனும்.
""பட்சி ராஜனே! வைகுண்ட லோகத்தின் காவலன் நீ! எம்பெருமானை இமை போல காப்பவன் நீ! நம் எல்லோருக்கும் அவன் காவலன் என்பதே மெய்! அப்படிப்பட்ட எம்பெருமானுக்கே காவல் புரிவதும் ஒரு பாக்யம் அல்லவா? அப்படிப்பட்ட பாக்கியசாலி உன்னருளால் உய்யவும், உன்னைப் போலவே எம்பெருமான் மீது தளராத பக்தியும் கொள்ளவே நான் உன்னை தியானித்தேன்” என்றார் வேங்கடநாதன்.
""மகிழ்ச்சி... உன் விருப்பம் ஈடேறட்டும். கூடுதலாக வித்யா மற்றும் மேதா விலாச சொரூபமான ஹயக்ரீவ ரூபத்தை அளித்து ஹயக்ரீவ மூல மந்திரத்தையும் உபதேசிக்கிறேன். இந்த மந்திர உபாசனை ஆயகலைகள் அறுபத்து நான்குக்கும் அதிபனாக்கும்! சர்வ தந்திர சுதந்திரனாக இந்த மண்ணில் உன்னை உலகோர் அழைக்கும்படி செய்யும்” என்றபடியே விக்ரகத்தை அளித்து மந்திரத்தை வேங்கடநாதனின் காதில் உபதேசித்தான்.
வேங்கடநாதன் பூரித்தார். சிலகாலம் அங்கேயே ஹயக்ரீவருக்கு ஆராதனை நிகழ்த்தி, நேர் எதிரில் தேவநாதனாக கோயில் கொண்டிருக்கும் எம்பெருமானுக்கும் தொண்டாற்றினார். ஹயக்ரீவரின் வித்யாபலம் உலகத்தவருக்கு பூரணமாக கிடைக்க வழிசெய்தார்.
இதனால் வேதம் கற்போர் முதல் வித்தை கற்போர் வரை சகலருக்கும் உற்ற துணையானானர் ஹயக்ரீவர்! பின் தனது பிரேமைக்குரிய அத்திகிரிக்கும் திரும்பினார். அங்கு வரதனைக் கண்டதும் மெய்யுருகப் பல பாடல்கள் பாடினார். குறிப்பாக அத்திகிரி வரதன் காஞ்சியம்பதியின் எட்டுத் திக்குகளுக்கும் சென்று தன் திருமேனியைக் காட்டி அருள்வதில் நிகரற்றவன்.
அவ்வாறு அவன் விழாக்கோலம் பூணும் சமயத்தில் நாதஸ்வர இசை முழங்கும்! மேலும் டமாரம், எக்காளம், துந்துபி, கொம்பு என எல்லாக் கருவிகளும் இடத்திற்கேற்ப முழக்கமிடும்.
இவைகளின் நடுவில் திருச்சின்னம் என்றொரு வாத்தியம்!
பிரம்மன் யாகம் புரிந்து வேள்வியில் வரம் தரும் ராஜனாக, அதாவது வரத ராஜனாக எம்பெருமான் காட்சி தந்த போது, அக்காட்சி எல்லோருக்கும் கிடைத்திட வேண்டும் என பிரம்மன் விரும்பினான். அதனை உணர்ந்தே தேவலோக சிற்பியான மயனும், விஸ்வகர்மாவும் கூடி வரதராஜனை சிலையாக வடித்து அங்கேயே கோயிலும் உருவானது.
அத்திகிரி மீது வரதனாக எம்பெருமான் கோயில் கொண்டான். அங்கு கோயில் தொடர்பான சகலமும் உண்டானது.
அப்போது தேவர்கள் ஆளுக்கொரு நினைவுப் பரிசை வரதனுக்கு வழங்கினர். அதில் ஒன்று தான் நாதஸ்வரம் போலவே இருக்கும் திருச்சின்னக் கருவிகள்! இவை இரண்டையும் தொலைவில் இருந்து பார்க்கும் போது எம்பெருமானின் திருமண் காப்பு போலவும் தோற்றம் தரும். இதை இசைத்திட தனித்தெம்பு வேண்டும்.
எம்பெருமான் வீதியுலா புறப்படும் போது, அவன் வருகையை அறிவிக்க இந்த கருவியின் இசை பீறிடும். இதன் இசை கேட்போரை சிலிர்க்கச் செய்து மனதையும் ஒருமுகப்படுத்தும். திருவஹீ்ந்திர புரத்தில் இருந்து திரும்பிய நிலையில், இந்த கருவி இசை வேங்கடநாதனையும் கவர்ந்தது. இதன் ஒலி கேட்டதும் மனம் ஒருமைப்பட்டு எம்பெருமான் திருவடிகளை மனக்கண்களில் காட்சியாக தெரிந்தது! அதற்காக திருவஹீந்திரப் பெருமானின் பூரண அருள் இவருக்குள் பாடலாகப் பெருகத் தொடங்கியது.
""ஈருலகை படைக்க எண்ணியிருந்தார் வந்தாரெழின் மலரோன் தன்னையன்றே ஈன்றார் வந்தார்...” என நீண்டு சென்று இறுதியில், "அத்திகிரி அருளாளப் பெருமாள் வந்தார் ஆனைபரி தேரின் மேல் அழகர் வந்தார்கச்சி தனில் கண் கொடுக்கும் பெருமாள் வந்தார் கருத வரம் தருதெய்வப் பெருமாள் வந்தார் முத்திமழை பொழியும் முகில் வண்ணர் வந்தார் மூலமென வோலமிட வல்லார் வந்தார் உத்தர வேதிக்குள்ளே யுதித்தார் வந்தார் உம்பர் தொழும் கழலுடையார் வந்தார் தாமே!” என முடிந்தது. பின் இதுவே திருச்சின்ன மாலை என்றானது.
வேங்கடநாதனின் பாடலைக் கேட்ட வரதன் உள்ளம் கனிந்தான். அன்றிரவே வேங்கடநாதன் கனவில் ஒரு திருச்சின்னக் கருவியை கொண்டு சென்று வேங்கடநாதா "இது உனக்கு நான் தரும் பரிசு... நீ திருச்சின்ன மாலை பாடியமைக்கு நான் மனமுவந்து தரும் பரிசு என்றான்.
கண்விழித்த வேங்கடநாதன் அருகில் திருச்சின்ன கருவி இருந்தது. ஆனால் கோயிலில் ஒன்று குறைந்து போனது. ஆலய ஸ்தானீகர் கனவில் தோன்றிய வரதன் ஒரு கருவி இல்லை என வருந்த வேண்டாம். அது வேங்கடநாதனின் அன்புப் பரிசாகி விட்டது. மீதமுள்ள ஒரு கருவியால் இசைத்தால் போதும். ஏன் இரு கருவிகள் இல்லை என பார்ப்போர் சிந்தித்தால், அவர்களுக்கு வேங்கடநாதனும், அவனது திருச்சின்ன மாலையும் ஞாபகம் வர வேண்டும். என் தரிசன வேளையில் இசையோடு கூடிய குருதரிசனமாய் வேங்கட நாதன் திகழவே யாம் இவ்வாறு செய்தோம் என்றும் அருளி மறைந்தான்.
ஆலய ஸ்தானீகரும் கோயிலுக்கு சென்ற போது கோயிலில் ஒரு கருவியே இருந்தது. அப்போது அவன் பரிசாகத் தந்த கருவியோடு வந்த வேங்கடநாதன் பல பாடல்கள் பாடினார். "மும்மணிக்கோவை, கந்துப்பா, கழற்பா, அம்மானை , ஊசற்பா, ஏசற்பா, நவரத்தினமாலை என அதன் பின் வேங்கடநாதன் பாடிய பாடல்களை இன்றும் வைணவ உலகம் கொண்டாடுகிறது.
இன்றும் வரதனின் சன்னதியில் ஒரு திருச்சின்னமே ஒலிக்கப்படுகிறது. வேங்கடநாதன் பரிசாக பெற்ற திருச்சின்னம் தூப்புல் தேசிகன் சன்னதியில் ஒலிக்கப்படுகிறது. இச்சம்பவத்திற்கு பின் வேங்கடநாதனின் பக்தியும், புகழும் ராமானுஜருக்கும் ஏற்பட்டது போலவே எங்கும் பரவியது.
வைணவ சித்தாந்தமான விசிஷ்டாத்வைதம் என்னும் ராமானுஜ சித்தாந்தத்திற்கு இந்நிலையில் ஒரு சோதனை ஏற்பட்டது. ஸ்ரீரங்கத்தில் இருந்த அத்வைத வித்வான்கள் சிலர் விசிஷ்டாத்வைத தத்துவத்தை விமர்சனம் செய்ததோடு, தங்களின் சித்தாந்தமே பெரிதென வாதம் செய்தனர்.
இந்நிலையில் எம்பெருமானே வேங்கடநாதனை ஸ்ரீரங்கம் வரப் பணித்து, மாற்றுக் கருத்துடையோருக்கு விளக்கம் அளிக்கச் செய்தான்.
முன்னதாக வேங்கடநாதனும் ராமானுஜர் மீது, "யதிராஜ ஸப்தசதி என்னும் ஸ்தோத்திரத்தை குருவழிபாடாக பாடினார். பின் ரங்கநாதரையும், ரங்கநாயகி தாயாரையும் சேவித்து தன் வாதத்தை முன் வைத்தார். வாதப் போர் எட்டு நாள் இடையின்றி தொடர்ந்தது. வாதம் செய்வோரின் கேள்விகளுக்கெல்லாம் பதில் அளித்த வேங்கடநாதன், பதிலுக்கு கேட்ட கேள்விகளுக்கு அத்வைதிகள் பதிலளிக்க முடியாமல் திணறினர். பின் வைணவர்களால் "வேதாந்தாச்சார்யர் என்ற பட்டத்திற்கும் உரியவரானார்.
ராமானுஜர் போலவே ஸ்ரீரங்கத்தையும் காஞ்சி போலவே கருதி பல ஆண்டுகள் தங்கி பல நூல்கள் இயற்றினார். இக்கால கட்டத்தில் ஸ்ரீரங்கத்தில் வாழ்ந்த சுதர்சன சூரி என்பவர் வேங்கடநாதன் என்ற வேதாந்தசார்யனுக்கு "கவிதார்க்கிக சிம்மம் என்ற பட்டத்தை அளித்தார். வேங்கடநாதன் வேதாந்த தேசிகன் என பெயர் பெற்றார். வேதாந்த தேசிகனால் வைணவம் கொடி கட்டிப் பறந்தது. காஞ்சி, ஸ்ரீரங்கம் கோயில்களில் திருவிழாக்கள் நடந்து மாதம் மும்மாரி பொழிந்தது. காலம் இப்படியே சென்று விடுமா என்ன? இக்கால கட்டத்தில் சைவர், வைணவர் ஆகிய அனைவருக்கும் பெருஞ்சோதனை மாற்றுமத வழிமுறைகளை பின்பற்றும் மிலேச்சர்களால் ஏற்படத் தொடங்கியது.