பதிவு செய்த நாள்
25
டிச
2019
12:12
தனுசு ராசியில் சூரியன், சந்திரன், சனி, குரு, புதன், கேது ஆகிய ஆறு கிரகங்களும் இன்று மாலை 5:40 மணி முதல் டிச.27 இரவு 12:51 மணி வரை இணைய உள்ளன. இதில் சந்திரன் தவிர மற்ற கிரகக்கூட்டணி 2020 ஜன.13 வரை தொடரும். இதனால் 12 ராசியினருக்கும் ஏற்படும் பலன்கள் இங்கு இடம் பெற்றுள்ளன. சுனாமி, நிலநடுக்கம் போன்ற இயற்கைப் பேரழிவுகள் நிகழ வாய்ப்பில்லை. சிறிய பாதிப்புகள் ஏற்படலாம். விநாயகர், சிவன், பெருமாள், ராமர், அனுமன், மகாலட்சுமியை வழிபட்டால் நன்மை அதிகரிக்கும்.
மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்): ராசிக்கு ஒன்பதாம் வீட்டில் ஆறு கிரகங்கள் சேர்வதால் அதிர்ஷ்டம் உண்டாகும். நல்லதே நடக்கும். எதிர்பாராத சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புண்டு. தந்தையுடன் கருத்து வேறுபாடு வந்தால் விட்டுக் கொடுப்பது நலம். பெண்களால் நன்மை உண்டாகும். மனைவியின் உடல்நிலை சீராகும். உடன் பிறந்தவர்கள் மூலம் பணஉதவி கிடைக்கும். தொழிலில் எதிர்ப்பு விலகும். திறமைக்குரிய பலன் கிடைக்கும். ஆடை, ஆபரணம் சேரும்.
ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2): எட்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. வீண்பேச்சை தவிர்ப்பது நல்லது. தாய், தந்தைக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்படலாம். அலுவலகத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். எப்போதும் பரபரப்பாக உழைக்க நேரிடும். அதற்கான பரிசு, பாராட்டு எதிர்பார்க்க வேண்டாம். உடலில் சிறு பிரச்னை ஏற்பட்டாலும் மருத்தவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. உணவு, உடையில் தூய்மை பின்பற்றவும், வீட்டைத் தவிர்த்து வெளியிடத்தில் சாப்பிட வேண்டாம்.
மிதுனம் (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) : ஏழாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. பணம் கொடுக்கல், வாங்கலில் அலட்சியம் கூடாது. பெரிய தீமை, சிரமம் ஏற்படாது. நடந்து முடிந்த அல்லது நடக்கப் போகிற சுப நிகழ்ச்சிகளால் மனநிறைவு உண்டாகும். கடந்த காலத்தில் இருந்த தடைகள், தாமதம் விலகும். மனைவி அல்லது கணவரின் கருத்துக்கு மதிப்பளிப்பது நல்லது. அரசு வகையில் நன்மையை எதிர்பார்க்கலாம். திருமணம் நிச்சயமாகும். பிரார்த்தனை நிறைவேறும். நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும்.
கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்): ஆறாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. பணம், நகை இரவல் கொடுக்க, வாங்க வேண்டாம். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். எதிரி தொல்லை மறையும். ஆரோக்கியம் மேம்படும். எல்லா விஷயங்களும் நல்லதாகவே நடக்கும். சுப விஷயத்தில் மட்டும் தாமதம் ஏற்படும். ஆனால் ஒரேயடியாக நின்று போகாது. நண்பர்களால் நன்மை உண்டு. பெற்றோருக்கு நன்மை அதிகரிக்கும். ஒருநேரம் போல மறுநேரம் இருக்க மாட்டீர்கள். மனதை சீராக வைத்துக் கொள்ளுங்கள்.
சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1): ஐந்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. குழந்தைகளால் மகிழ்ச்சி காண்பீர்கள். அவர்களுக்கு பிரச்னை வந்தாலும் கவலை வேண்டாம். அவை விரைவில் சரியாகும். வாகனங்கள் ஓட்டும் போது கவனமாக இருக்குமாறு அவர்களிடம் சொல்லுங்கள். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பணம் வர வாய்ப்புண்டு. வெளியூர், வெளிநாட்டிலிருந்து நல்ல தகவல் வரும். நண்பர், உறவினர் வருகையால் மகிழ்ச்சி காண்பீர்கள். கோபதாபத்திற்கு இடம் கொடுக்காதீர்கள்.
கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2): நான்காம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. வாகனம் வாங்குவதை சற்று தள்ளிப் போடுங்கள். பத்திரப்பதிவு, ஒப்பந்தம், ஜாமின் கையெழுத்து என எதிலும் அவசரப் பட வேண்டாம். நீங்கள் வேலை தேடுகிறீர்களா? எனில் உடனடியாக நல்ல வேலை கிடைக்க வாய்ப்புள்ளது. வெளிநாட்டு பணியாக இருக்கலாம். அலுவலகத்தில் செல்வாக்கும் அதிகரிக்கும். புது வீடு வாங்குவீர்கள்.
துலாம் (சித்திரை 3,4 சுவாதி, விசாகம் 1,2,3): மூன்றாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. மனதில் துணிச்சல் அதிகரிக்கும். அதன் காரணமாக செயலில் வெற்றி கிடைக்கும். சகோதர வழியில் சண்டை, சச்சரவைத் தவிர்ப்பது நல்லது. தந்தையின் உடல் நிலையில் பின்னடைவு இருந்தாலும் கவலை வேண்டாம். விரைவில் சரியாகிவிடும். கணவர் அல்லது மனைவிக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு காத்திருக்கிறது. உங்களுக்கும் பதவி உயர்வு, நல்ல இடமாற்றம் கிடைக்கும். பிள்ளைகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும்.
விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை): இரண்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. பேச்சு, செயலில் விழிப்புடன் இருப்பது அவசியம். குடும்பத்தில் குழப்பம் நேராதபடி எச்சரிக்கையுடன் செயல்படுங்கள். இந்த நாட்களில் வீட்டை விட்டு எங்கும் போகாமல் இருப்பது உத்தமம், வங்கிக் கணக்கில் கூடுதல் பணம் சேரும். உடல்நலனில் சிறிதும் அலட்சியம் கூடாது. குறிப்பாக வயிறு சம்பந்தப்பட்ட கோளாறு வராமல் உணவு விஷயத்தில் கவனம் தேவை. கலைத் துறையினருக்கு சாதகமான காலகட்டம்.
தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1): உங்கள் ராசியில் ஆறு கிரகச் சேர்க்கை உள்ளன. மனிதில் குழப்பம் அதிகரிக்கும். இந்த மூன்று நாட்களில் முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டாம். சிலருக்கு வீண் பழி ஏற்படக்கூடும். ஆனால் ஒரே மாதத்துக்குள் நல்லவர் என்பதை நிரூபணம் செய்வீர்கள். தொழில் விரிவாக்கம் தவிர்க்கவும், முக்கிய முதலீடுகளை ஒத்தி போடுங்கள். பணத்தை எதிலும் முடக்க வேண்டாம். குடும்பத்தினருடன் வாக்குவாதம் வராமல் பார்த்து கொள்ளுங்கள். தவறு நேர்ந்தால் உடனுக்குடன் மன்னிப்பு கேளுங்கள்.
மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1, 2): பன்னிரண்டாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. செலவுகள், இழப்புகள் ஏற்பட வாய்ப்புண்டு. சுப விஷயத்திற்காக சக்திக்கு மீறி செலவு செய்வீர்கள். நண்பர்களுக்குக் கடன் கொடுப்பது பற்றி யோசித்து முடிவு எடுப்பது நல்லது. வீண் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உறவுகளை இழக்க வேண்டாம். நண்பர்கள் என நீங்கள் நம்பிப் பழகுபவர்கள் நேர் எதிராக மாற வாய்ப்புண்டு. அறிமுகம் இல்லாதவர்களிடம் விழிப்பாக இருக்கவும். முக்கிய ரகசியங்களை யாரிடமும் பகிர வேண்டாம்.
கும்பம் (அவிட்டம் 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3): பதினோராம் வீட்டில் ஆறு கிரகங்கள் சேர்வதால் லாபம் எதிர்பார்க்கலாம். கொடுத்து விட்டு மறந்த பணம் கூட திரும்பி வரும். ஆன்மிகவாதிகளுக்கு மதிப்பு உயரும். நீண்ட பயணத்தினால் மகிழ்ச்சி காண்பீர்கள். வெளியூர், வெளிநாட்டிலிருந்து சுப செய்தி கிடைக்கும். சகோதரவழியில் உதவி கிடைக்கும். பதவியும் சம்பளமும் உயரும். அரசாங்க வகையில் சலுகை எதிர்பார்க்கலாம். சிலர் அரசு வேலையில் சேர்வர். கலைத்துறையினருக்கு நன்மை காத்திருக்கிறது.
மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி): பத்தாம் வீட்டில் ஆறு கிரகங்கள் உள்ளன. புதிய பொறுப்புகளை ஏற்கும் நிலை உருவாகும். அதற்கு உரிய பலன் கிடைக்குமா என உறுதி செய்து மேற்கொள்ளுங்கள். கலைஞர்களுக்குப் புதிய வாய்ப்பு கிடைக்கும். அந்தஸ்து உயரும் விதத்தில் புது வாகனம் வாங்குவீர்கள். அரசு வகையில் ஆதாயம் கிடைக்கும். பணிகளில் மந்தநிலை இருந்தாலும் மனச்சோர்வு உண்டாகாது. பணி மாறுதல் ஏற்படலாம். தாயாருக்கு நன்மை அதிகரிக்கும். சிலருக்கு வெளிநாட்டுக் கல்வி சாத்தியமாகும்.
- வேதா கோபாலன்