கிறிஸ்துமஸ் உருவான விதம்: கிறிஸ்துமஸ் என்ற வார்த்தை "கிறிஸ்ட் மாஸ்" என்ற இரு வார்த்தைகளின் இணைப்பு மூலம் உருவானது. இயேசு கிறிஸ்து பிறந்த ஆண்டு சரியாக தெரியவில்லை என்பதால், கிமு 2க்கும் கிமு 7க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பிறந்திருக்கலாம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கருதுகின்றனர். யூதர்களின் பருவகாலம், நாட்காட்டிகள் மூலம் கணக்கிட்டு யூகத்தின் அடிப்படையில் டிச.25 கிறிஸ்துமஸ் பண்டிகையாக கொண்டாடப்படுவதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முதன் முதலில் 4ம் நூற்றாண்டை சேர்ந்த மேற்கத்திய கிறிஸ்தவர்கள் கொண்டாடியதாக வரலாற்று குறிப்புகள் உள்ளன. ஆனால் மற்ற கிறிஸ்தவர்கள் மறுப்பு தெரிவித்து, ஜன.6ல் இயேசு பிறந்ததாக கொண்டாடினர்.
இயேசு என்றால் என்ன?
ஒவ்வொரு பெயருக்கும் ஒரு அர்த்தம் இருக்கும். இயேசு என்பதற்கு விடுதலையாக்குபவர் என்றும், கிறிஸ்து என்பதற்கு தீர்க்கதரிசி என்றும் அர்த்தம்.
மெக்சிகோவில் உறியடி: மெக்சிகோவில் கிறிஸ்துமஸ் நாளில் பானைகளை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு பானையின் மீது சாத்தானை வரைந்து, அதனுள் பொம்மைகள், பண்டங்கள் நிரப்பப்படும். அதை உயரத்தில் கட்டித் தொங்க விடுவர். மேலும் கீழுமாக அந்த பானையை இறக்க, சிறுவர்கள் அதனை தடியால் அடித்து நொறுக்குவர். உள்ளிருந்து பொம்மை மற்றும் இனிப்புகள் சிந்தும். சிறுவர்கள் மகிழ்ச்சி அடைவர். சாத்தான் நமக்கு நன்மை செய்வது போல கவரப் பார்க்கும். அதற்கு இடம் கொடுக்கக்கூடாது என்பதே இந்த நிகழ்ச்சியின் நோக்கம்.
பெத்லகேம் செல்வோம்: ஆடம்பரமும், வசதியும் இல்லாத ஊர் பெத்லகேம். இங்குதான் இயேசு பிறந்தார். இந்த ஊருக்குச் சென்றாலே மனதில் அமைதியும், இயற்கையில் மனம் ஈடுபடுவதையும் உணர முடியும். பனி விழும் இரவில் மந்தையோடு மந்தையாகத் தங்கியிருந்த மேய்ப்பர்களுக்குத் தான் இயேசு பிறந்த நற்செய்தி துாதர்கள் மூலம் மகிழ்ச்சியுடன் அறிவிக்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் மேய்ப்பர்கள் இழிவானவர்களாக கருதப்பட்டனர். அவர்களுக்கு குடிமதிப்பு, குடியுரிமை இல்லை. ஆகவே மற்றவர்கள் தங்களின் சொந்த ஊருக்குப் போய் குடிமதிப்பு பதிவு செய்யச் சென்ற போது இவர்கள் செல்ல தேவைப்படவில்லை. மேய்ப்பர்களின் சாட்சிகள் ஏற்றுக் கொள்ளப்படாத சூழல். இந்நிலையில் ஆண்டவர் மேய்ப்பர்களுக்கு முதலிடம் கொடுக்கின்றார். மேய்ப்பர்களுக்கு இயேசுவின் பிறப்பு அறிவிக்கப்பட்டது. அவரைக் காணும் பாக்கியம் கிடைத்தது. பாவங்களிலிருந்து விடுபட பெத்லகேம் செல்வோம்.