பதிவு செய்த நாள்
31
டிச
2019
10:12
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், மஹா தீபம் ஏற்றிய அண்ணாமலையார் மலை உச்சியில், பிராயச்சித்த அபிஷேகம் மற்றும் பரிகார பூஜை நடந்தது.
திருவண்ணாமலையில், 14 கி.மீ., சுற்றளவு உள்ள, மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். கார்த்திகை தீப திருவிழாவில் கடந்த, 10ல், 2,668 அடி உயர, அண்ணாமலையார் மலை உச்சியில், மஹா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து, 11 நாட்கள் எரிந்தது. மலையையே சிவனாக நினைத்து பக்தர்கள் வழிபடுவதால், மலை மீது ஏறிச்சென்று, மஹா தீபத்தை கண்டு வழிபட்டனர். பக்தர்கள் மலை மேல் ஏறியதற்கு, பிராயசித்த பரிகார பூஜை நேற்று நடந்தது. இதையொட்டி, அருணாசலேஸ்வரர் கோவிலில், நேற்று காலை, 10:00 மணிக்கு, சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க, சிறப்பு யாக சாலை பூஜை நடத்தப்பட்டு, அதன், கலச நீரை மலை உச்சிக்கு கொண்டு சென்று, அருணாசலேஸ்வரர் சுவாமி பாதத்தில், பிராயச்சித்த அபிஷேகம் செய்து சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.