பதிவு செய்த நாள்
25
ஏப்
2012
11:04
திருநெல்வேலி:குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்திரை தேரோட்டத் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது.
திருக்கயிலாய பரம்பரை திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருவுருமாமலை என அழைக்கப்படுகிற குறுக்குத்துறையில் பழமைவாய்ந்த சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் சித்திரைத் தேர் திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு தினமும் பகலில் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும், காலை, மாலையில் வாகனங்களில் சுவாமி வீதியுலாவும் நடக்கிறது. ஏப்.30ம் தேதி 7ம் திருவிழாவை முன்னிட்டு அன்று காலை ஸ்ரீ சண்முகர் உருகு சட்டசேவை, பகல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், தண்டியல் பல்லக்கு நடக்கிறது. மாலையில் வெற்றிவேர் சப்பரத்தில் ஆறுமுகபெருமான் எழுந்தருளலும், தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தியுடன் சுவாமி நெல்லை டவுனுக்கு எழுந்தருளல் நடக்கிறது. 8ம் நாளான மே 1ம் தேதி காலை வெள்ளை சாத்தியும் (நான்முகன் காட்சி), மாலையில் பச்சை சாத்தியும் (திருமால் காட்சி) நடக்கிறது. இரவு உருத்திரன் காட்சியும், ஆறுமுகர் சேர்க்கையும் நடக்கிறது. மே 2ம் தேதி தண்டியல் பல்லக்கு, வெட்டுக்குதிரை, திருக்கயிலாய வாகனத்தில் வீதியுலா, மே 3ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இரவு சிறப்பு அபிஷேகமும், ஏழு வண்ண பல்லக்கு நடக்கிறது. மே 4ம் தேதி தீர்த்தவாரி நடக்கிறது. இரவு வெள்ளிமயில் வாகனத்தில் வீதியுலா நடக்கிறது.