பதிவு செய்த நாள்
10
ஜன
2020
01:01
மதுரை: ஆடல்வல்லானாகிய நடராஜப்பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை அபிஷேகம் செய்ய வேண்டும் என்று ஆகமவிதிகள் கூறுகின்றன. மூன்று முறை திதியிலும், மூன்று முறை நட்சத்திர நாளிலும் அபிஷேகங்கள் நடக்கின்றன. இதில் மிகச்சிறப்பானது மார்கழி திருவாதிரை. மற்றவை சித்திரை திருவோணம் மற்றும் ஆனி உத்திர நட்சத்திர நாட்களாகும். ஆவணி, புரட்டாசி மாசி மாத வளர்பிறை சதுர்த்தசி திதிகளிலும் அவருக்கு அபிஷேகம் செய்யப்படும். அதன்படி இன்று ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி அனைத்து சிவன் கோயில்களிலும் சிறப்பாக நடைபெற்றுவருகிறது.
மதுரையில் அனைத்து முக்கிய கோயில்களிலும் ஆருத்ரா தரிசன நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் கைலாசநாதர் கோவிலில் நடந்த ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியில் நடராஜர் சிவகாமி அம்பாளுடன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திருப்பூர், நல்லூர் விஸ்வேஸ்வர சுவாமி ஆருத்ரா தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஆருத்ராவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில் உள்ள வடாரண்யேஸ்வரர் கோவிலில் விடிய, விடிய அபிஷேகம் நடந்தது. அபிஷேகத்தின் போது சங்கு மூலம் ஊதிய பெண் பக்தர்கள் தரிசனம் செய்தனர். திண்டுக்கல் சித்தி விநாயகர் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர், சிவகாமியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திண்டுக்கல் பத்மகீரீஸ்வரர், அபிராமியம்மன் கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் நடராஜர் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.