பந்தலூர்: இளைஞர்கள் விவேகானந்தரின் நெறி முறைகளை பின்பற்றினால் வளமான சமுதாயம் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. பந்தலூரில் ஸ்ரீ விவேகானந்தா இளைஞர் மன்றம் சார்பில், விவேகானந்தரின் ஜெயந்தி தின விழா நடத்தப்பட்டது.
தலைவர் சுரேஷ் வரவேற்றார். நிர்வாகி தீபக்ராம் தலைமை வகித்தார். விவேகானந்தரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து முன்னிலை வகித்த பந்தலூர் நூலகர் அறிவழகன் பேசுகையில், சுவாமி விவேகானந்தர் இளைஞர் மீது அதிக நம்பிக்கை கொண்டவர்.அதனால்தான் விவேகானந்தரின்-பொன்மொழிகள் அனைத்து இடங்களிலும் இளைஞர்களுக்கும் போதனையாக கற்பிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய காலகட்டத்தில் நாகரீகம் மற்றும் கலாச்சார வளர்ச்சி காரணமாக, தவறான வழிகளில் பயணிக்கும் நிலையில் ஒட்டுமொத்த சமுதாய சீர்கேடு அடைந்து வருகிறது. விவேகானந்தரின் பொன்மொழிகளை இன்றைய இளைய சமுதாயத்தினர் முழுமையாக புரிந்து கொண்டு அதற்கேற்ப நடத்தினால் வளமான மற்றும் நலமான சமுதாயத்தை உருவாக்க இயலும் என்றார். தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் மற்றும் மன்ற நிர்வாகிகள் ஆட்டோ மற்றும் ஜீப் ஓட்டுனர்கள் சமூக ஆர்வலர்கள் பங்கேற்றனர்.