தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26ஏப் 2012 11:04
தூத்துக்குடி: தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரை திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. வரும் 4ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. தூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சங்கரராமேஸ்வரர் கோயிலில் (சிவன் கோயில்) ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு சித்திரை திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 6.15 மணிக்கு யானை மீது கொடிப்பட்டம் வைக்கப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக உலா வந்தது. கோயிலை வந்து சேர்ந்ததும், கொடிக்கம்பத்திற்கு விசேஷ பூஜைகள் நடந்தது. காலை ஒன்பதரை மணிக்கு கொடியேற்றம் நடந்தது. கொடியேற்றத்தை ஒட்டி சுவாமி, அம்மனுக்கும், கொடி கம்பத்திற்கும் விசேஷ பூஜைகள் நடந்தது. கொடியேற்று நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன், தலைமை அர்ச்சகர் செல்வம் பட்டர் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், மண்டகப்படிதாரர்கள் கலந்து கொண்டனர். இரவு 8 மணிக்கு சுவாமி, அம்மன் பூங்கோயில் சப்பரத்தில் ரத வீதி உலா வந்தது. ஒவ்வொரு வீடுகள் முன்பும் சுவாமிக்கு தேங்காய் உடைத்து பூஜைகள் செய்யப்பட்டன.திருவிழாவை ஒட்டி ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வாகனங்களில் சுவாமி, அம்மன் வீதி உலா வருதல் நடக்கிறது. இன்று திருஞான சம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடக்கிறது. சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வரும் 4ம் தேதி நடக்கிறது. மிகப் பெரிய அளவில் தேரோட்டத்தை நடத்துவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.