அண்மையில் தம் 95ம் வயதில் காலமான எழுத்தாளர் பரணீதரன் மூன்று துறை சாதனையாளர். ஆன்மிக எழுத்தாளர். ஸ்ரீதர் என்ற புனைப்பெயரில் கார்ட்டூன் வரைபவர். மெரீனா என்ற பெயரில் நாடகம் எழுதியவர். பரணீதரனின் ஆன்மிகக் கட்டுரைகள் காஞ்சி மகாசுவாமிகளால் பாராட்டப்பட்டவை. சுவாமிகளின் பக்தரான பரணீதரன், திருமணம் செய்து கொள்ளாதவர். தன் அறையில் எப்போதும் சுவாமிகளின் படத்தின் முன் தியானத்தில் ஆழ்ந்திருப்பார். அவ்வப்போது அவர் தன் சந்தேகங்களை சுவாமிகளிடம் கேட்டுத் தெளிவதுண்டு.
அருணாசல மகிமை’ என்னும் தொடரை எழுதிய பரணீதரன், அதில் சஷோத்ரி சுவாமிகள் பற்றியும் எழுதினார். அப்போது ஒருமுறை சுவாமிகளிடம், ‘சஷோத்ரி சுவாமிகள் 1870 – 1889 வரை வாழ்ந்த வீடு எங்குள்ளது எனத் தெரியவில்லை’ என வருந்தினார். ‘ கொஞ்சம் முயற்சி செய்’ என்ற சுவாமிகள், சிலரது பெயர்களைச் சொல்லி விசாரிக்கச் சொன்னார். அதில் குறிப்பிட்ட மூன்று வீடுகளில் ஒன்றாக இருக்கலாம் என்ற அளவுக்கு பரணீதரனால் வர முடிந்தது. அந்நிலையில் வீடுகளைக் கட்டியவர்களிடம் விசாரிக்கச் சொன்னார் சுவாமிகள். அதில் குறிப்பிட்ட ஒரு வீட்டில் 19 வயது இளைஞர் ஒருவர் ஆன்மிகப் பித்தேறி வீட்டை விட்டு ஓடியதாக தகவல் கிடைத்தது. அந்த குறிப்பிட்ட வீடு தான் சஷோத்ரி இருந்த வீடு என்பது உறுதியானது. அப்போது மகாசுவாமிகள் ‘கொல்லவார்’ சத்திரத்தில் முகாமிட்டிருந்தார். சஷோத்திரி சுவாமிகளின் வீட்டைக் கண்டுபிடித்ததை மகிழ்ச்சியுடன் தெரிவித்தார் பரணீதரன். திருவாரூரில் சங்கீத மும்மூர்த்திகள் வாழ்ந்த வீட்டை வாங்கியது போல, இதையும் வாங்க உத்தரவிட்டார் சுவாமிகள். அதற்கான குழு உருவாக்கப்பட்டு விலைக்கும் வாங்கினர். ‘ஸ்ரீகாமகோடி சஷோத்ரி சுவாமிகள் நிவாஸம்’ என வீட்டுக்கு பெயர் சூட்டப்பட்டது.
அங்கு மகாசுவாமிகள் விருப்பத்திற்காக சஷோத்ரி சுவாமிகளின் ஓவியம் வைக்கப்பட்டது. மூவலுார் கோபால தீட்சிதர் அந்த வீட்டில் தங்கி தினமும் அக்னி ஹோத்ரம், இஷ்டி ஹோமம் நிகழ்த்த ஏற்பாடு செய்தார் சுவாமிகள். இங்கு மார்கழி நவமி திதியன்று சஷோத்ரி சுவாமிகளின் ஆராதனையும் தொடங்கப்பட்டது. ஒருநாள் பரணீதரனிடம் காஞ்சி மகாசுவாமிகள், சஷோத்ரி சுவாமிகளுக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என மணலில் வரைந்து காட்டினார். அதன்பின் நல்லி குப்புசாமி செட்டியார், சங்குபணி சிவராஜ் முதலியார், கே.ஆர். விஸ்வநாதன், பரணீதரன் ஆகியோர் கொண்ட குழுவினர் மூலம் திருப்பணி நிறைவேறியது. அதில் 1985 முதல் (தை மாதம் அஸ்த நட்சத்திரம்) சஷோத்ரி சுவாமிகளின் ஜயந்தி கொண்டாடப்படுகிறது. மகாசுவாமிகள் சஷோத்ரி சுவாமிகளின் மீது பெருமதிப்பு வைத்திருந்தார் என்பதை பேட்டி ஒன்றில் பரணீதரன் பதிவு செய்துள்ளார்.