ஒருவன் தான் செய்த தவறுக்கு தண்டனை அனுபவித்து விட்டு சிறையிலிருந்து வெளியே வந்தான். ஒருநாள் அவன் டீக்கடையில் நின்று கொண்டிருந்த போது, ரோட்டில் குழந்தை ஒன்று தனியாக விளையாடியது. அந்தக் குழந்தை தனக்கு தண்டனை வாங்கி கொடுத்தவனுடையது என்பதை அறிந்தான். அப்போது கார் ஒன்று குழந்தையை மோதும் விதத்தில் நெருங்கியது. அதைப் பார்த்ததும் காப்பாற்ற விரைந்தான். அவனைக் கண்ட குழந்தையின் தாய், ‘அந்தப் பாவி கொல்லத்தான் வருகிறான்’ என பதறினாள். ஆனால் நடந்தது எல்லாம் அவள் நினைத்ததற்கு மாறாக இருந்தது.
அவன் குழந்தையை காப்பாற்றி, கொஞ்சினான். தாயிடம் ஒப்படைக்கும் போது, ‘‘எதிரியே ஆனாலும் அவனின் குழந்தையை கொல்லக் கூடாது’’ என்னும் நாயகத்தின் மார்க்கத்தை பின்பற்றுகிறேன். அதனால் பயப்பட தேவையில்லை என்றான். இதைக் கேட்ட தாய் ஆச்சரியப் பட்டாள். தனக்கு தண்டனை வாங்கி கொடுத்தவனின் குழந்தை என்று தெரிந்தும் கூட காப்பாற்றி விட்டாயே! உனக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன் என்றாள். அதற்கு அவன், ‘‘ நன்றி சொல்ல விரும்பினால் இறைவனுக்கு கூறுங்கள். ஏனெனில் தவறு செய்த என்னையும் திருத்துவதற்காகவே இப்படியொரு சந்தர்ப்பத்தை இறைவன் அளித்துள்ளான்’’ என்றான்.