அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரம் பிருந்தாவனத்தில் ராதா கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது. அம்பாசமுத்திரம் வடக்கு ரதவீதியிலுள்ள பிருந்தாவனத்தில் 43வது வருட ராதா கல்யாண மஹோத்ஸவ விழா கடந்த மாதம் 29ம் தேதி கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தொடர்ந்து உஞ்சவிருத்தி மற்றும் தோடய மங்களம், அஷ்டபதி பஜனை தீபாராதனை நடந்தது. 29ம் தேதி அஷ்டபதி பஜனையை தொடர்ந்து ஆன்மீக சொற்பொழிவுகள் நடந்தன. நேற்றுமுன்தினம் அஷ்டபதி பஜனையையடுத்து, அம்பாசமுத்திரம் கிருஷ்ண சுவாமி கோயிலிருந்து புறப்பட்ட கிருஷ்ணர் பட ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக பிருந்தாவனத்தை வந்தடைந்தது. நகர சங்கீர்த்தனம் நடந்தது. உஞ்சவிருந்தி பஜனையினையடுத்து நேற்று பக்தர்கள் "கிருஷ்ணா, ராதா என்னும் பக்தி கோஷத்தை முழங்க ராதா தேவிக்கு மாங்கல்யதாரணம் பூட்டப்பட்டு, தீபாராதனை நடந்தது. முன்னதாக மாவோயிஸ்டுகளால் கடத்தப்பட்ட அலெக்ஸ் பால் மேனன் விடுதலைக்கும், பக்தர்களது கோரிக்கைகளுக்குமாக கூட்டு பிரார்த்தனை நடந்தது. இதில் பிருந்தாவன அன்பர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். இன்று(2ம் தேதி) காலை 9 மணிக்கு மேல் அபங்கம் மற்றும் ஐயப்பன் பஜனையும், ஆஞ்சநேய உத்ஸவமும், தீபாராதனையும் நடக்கிறது.