பதிவு செய்த நாள்
24
பிப்
2020
10:02
மொடக்குறிச்சி: கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் விழாவில், ஒரு எலுமிச்சம்பழம், 25 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி யூனியன், விளக்கேத்தி பஞ்., புது அண்ணாமலைபாளையத்தில், பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் மகா சிவராத்திரியை முன்னிட்டு, இரண்டு நாட்கள் பூஜை நடக்கும். இதில் பூஜையின்போது, பழந்தின்னி கருப்பண்ண ஈஸ்வரருக்கு வைக்கப்பட்ட ஒரு எலுமிச்சம்பழம், ஏலம் விடப்பட்டது. அதை, 25 ஆயிரம் ரூபாய்க்கு, நாமக்கல்லை சேர்ந்த பழனிவேல் ஏலம் எடுத்தார். கடந்தாண்டு, 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது. மேலும் சுவாமி நெற்றியில் அணிவிக்கப்பட்ட, 10 கிராம் எடை வெள்ளிக்காசை, ஈரோட்டை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், 35 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தார். இதேபோல் சுவாமிக்கு அணிவிக்கப்பட்ட, 10 கிராம் வெள்ளி மோதிரத்தை, ஓலப்பாளையத்தை சேர்ந்த சண்முகம், 40 ஆயிரத்து, 100 ரூபாய்க்கு ஏலம் எடுத்தார்.