பதிவு செய்த நாள்
03
மே
2012
11:05
தேனி: வீரபாண்டி திருவிழா பாதுகாப்பிற்கான, போலீசார் எண்ணிக்கை 1,500 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. திருவிழா பாதுகாப்பில் 1,100 போலீசார் ஈடுபடுவார்கள் என அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது பக்தர்கள் அதிகம் வரலாம் என்பதாலும், போலீசாரின் பணிச்சுமை கருதியும், பாதுகாப்பில் ஈடுபடும் போலீசார் எண்ணிக்கை 1,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு பணியில் இருக்கும் போது, தேவைப்பட்டால் ஓய்வு எடுக்கவும், இயற்கை உபாதைகளை கழிக்கவும் வீரபாண்டி போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. எஸ்.பி., பிரவீண்குமார் அபிநபு தலைமையில், 15 டி.எஸ்.பி.,க்கள், 50 இன்ஸ்பெக்டர்கள், 250 எஸ்.ஐ.,க்கள் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்படுகின்றனர். 300 பெண் போலீசார், நான்கு வெடிகுண்டு கண்டறியும் போலீஸ் பிரிவுவினரும் பாதுகாப்பு பணிக்கு வருகின்றனர்.கோயிலுக்குள் பக்தர்கள் செல்லவும், வெளியேறவும் தனித்தனி பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. வி.ஏ.ஓ., சாவடியில் இருந்து குலாளர் பாதை வாய்க்கால் பாலம் தனியே அமைக்கப்பட்டுள்ளது. கண்ணீஸ்வரமுடையார் கோயிலில் இருந்து வரும் அக்னிசட்டிகள் மெயின் ரோட்டிற்கு வராமல், தேரை சுற்றி கோயிலுக்கு செல்ல தனிப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு தரிசனம் செல்பவர்களுக்கு தனிப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் தெற்கு வாசல் எப்போதும் மூடப்பட்டிருக்கும், கிழக்கு வாசல் வழியாக உள்ளே நுழையும் பக்தர்கள் வடக்கு வாசல் வழியாக வெளியேற வேண்டும் ,என தெரிவிக்கப்பட்டுள்ளது.