பதிவு செய்த நாள்
13
மார்
2020
10:03
வீரபாண்டி: விநாயகர் கோவில்களில் நடந்த, சதுர்த்தி பூஜையில் திரளானோர் வழிபட்டனர். சங்கடஹர சதுர்த்தியையொட்டி, சேலம் மாவட்டம், அரியானூர் பிரிவிலுள்ள, மகா கணபதி கோவிலில், நேற்று காலை, மூலவர் கணபதி, அவரது வாகனமான மூஞ்சுரு ஆகியோருக்கு, சிறப்பு பூஜை, அபிஷேகம் செய்து வெள்ளிகவசம் சாத்தப்பட்டது. மாலையில் நடந்த சதுர்த்தி பூஜையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆட்டையாம்பட்டி, கைலாசம்பாளையம் புதூரிலுள்ள ராஜகணபதி கோவிலில், மூலவருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சேலம், அம்மாபேட்டை சவுந்தர ராஜ பெருமாள் கோவிலில், சவுந்தர விநாயகருக்கு, சிறப்பு அபிஷேகம் நடந்தது.
ரூ.5 லட்சத்தில்...: ஆத்தூர், வெள்ளை விநாயகர் கோவிலில், சங்கடஹர சதுர்த்தி பூஜை, நேற்று நடந்தது. இரவு, 7:00 மணிக்கு, மூலவர், உற்சவருக்கு, அபிஷேகம் நடந்தது. சுவாமியை மூஷிக வாகனத்தில் எழுந்தருளச்செய்து, கோவிலின் உட்பிரகாரத்தில் வலம் வரச்செய்தனர். மூலவருக்கு, ஐந்து லட்சம் ரூபாயில் புதிதாக வடிவமைக்கப்பட்ட தங்க கவசம் சாத்தப்பட்டது. திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அதேபோல், ஆத்தூர், ராணிப்பேட்டை செல்வ விநாயகர், விநாயகபுரம் விநாயகர், கோட்டை தலையாட்டி விநாயகர், கடைவீதி விநாயகர் உள்ளிட்ட கோவில்களில், பூஜை நடந்தது.