பதிவு செய்த நாள்
17
மார்
2020
10:03
சென்னிமலை: சென்னிமலை அருகே, நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில், திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் குவிந்தனர்.
சென்னிமலை - ஊத்துக்குளி சாலையில், புஞ்சை பாலத்தொழுவு கிராமத்தில், நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளது. பழமையான இக்கோயிலில், ஈஸ்வரன் சுயம்பாக எழுந்தருளியுள்ளார். இங்கு, ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் வரும் திங்கள்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடக்கும். இதன்படி பங்குனி மாத முதல் திங்கள்கிழமையான, நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு தலைமை குருக்கள் கண்ணன் தலைமையில், அபிஷேகம், தீபாராதனை நடந்தது. இதையடுத்து பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர். ஒரு மணி நேரத்துக்கும் மேல் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். அடுத்து வரும் பங்குனி மாத திங்கள்கிழமைகளில் இதேபோல் பக்தர்கள் வருவர். நஞ்சுண்டேஸ்வரருக்கு தேள், பாம்பு, பூரான் உருவ பொம்மைகள், கண்ணடக்கம், புருடு போன்றவற்றை காணிக்கையாக செலுத்தி வழிபட்டால், உடலில் உள்ள பல நோய்கள், கண் பிரச்னை தீரும் என்பது ஐதீகம். கோவில் பிரசாதமான வெள்ளரிகாயை பக்தர்கள் வாங்கி சென்றனர். இதனால் அதிக அளவில் வெள்ளரிகாய் கடை அமைக்கப்பட்டிருந்தது. அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னிமலை, ஊத்துக்குளியில் இருந்தும் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.