பதிவு செய்த நாள்
01
மே
2020
11:05
திருவண்ணாமலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில், அக்னி நட்சத்திரத்தை முன்னிட்டு வரும், 4 முதல், 28 வரை தாராபிஷேகம் நடக்க உள்ளது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம், வரும், 4ல், தொடங்கி, 28ல், முடிகிறது. இந்த நாட்களில், சுவாமியின் திருமேனியை குளிர்வித்து, எல்லா ஜீவராசிகளை பாதுகாக்கவும், கோடையின் தாக்கம் குறைந்து, போதிய மழை வேண்டியும், திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தினமும் தாராபிஷேகம் நடக்கும். அப்போது, ஏலக்காய், ஜாதிக்காய், ஜவ்வாது, சந்தனம், போன்ற வாசனை திரவியங்களை பன்னீரில் சேர்த்து, அதை தாரா பாத்திரத்தில் ஊற்றி, சுவாமி கருவறையில், லிங்கம் மீது சொட்டு சொட்டாக விழும்படி செய்விக்கப்படும். தாராபிஷேகம் நடக்கும் நேரத்தில், சுவாமிக்கு எந்தவித கவசமும் அணிவிக்கப்படாது.