பதிவு செய்த நாள்
09
மே
2012
11:05
செய்துங்கநல்லூர் : கருங்குளம் வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலமாக நடந்தது. கருங்குளம் வகுளகிரி மலையில் அமைந்துள்ள வெங்கடாசலபதி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா நடந்தது. இதனை முன்னிட்டு கடந்த 27ம் தேதி தேங்காய் சாத்தி பந்தல் கால்நட்டு விழா துவங்கியது. அதனை தொடர்ந்து தினமும் இரவு சொற்பொழிவும், உற்சவர் முதல் நாளில் தோளுக்கினியான் வாகனத்திலும், 2ம் நாள் சிம்ஹ வாகனத்திலும், 3ம் நாள் ஆஞ்சநேயர் வாகனத்திலும், 4ம் நாள் சேஷ வாகனத்திலும், 5ம் நாள் கருட வாகனத்திலும், 6ம் நாள் யானை வாகனத்திலும், 7ம் நாள் பொன் சப்பரத்திலும், 8ம் நாள் குதிரை வாகனத்திலும், 9ம் நாள் தவழ்ந்த கிருஷ்ண திருக்கோலத்திலும் எழுந்தருளி மலை மேல் வலம் வந்தார். 10ம் நாள் சித்ரா பவுர்ணமி அன்று காலை உற்சவர் தாயாருடன் எழுந்தருளி அருகில் உள்ள புதுமண்டபம் வந்து சேர்ந்தார். நவகலச ஸ்நாபத திருமஞ்சனம் நடந்தது. மாலை மீண்டும் உற்சருக்கு திருமஞ்சனம் நடந்தது. பின்னர் பொன் சப்பரத்தில் உற்சவர் மலையிலிலிருந்து கீழே இறங்கி கிராமத்தில் வீதி உலா வந்தார். உற்சவர் மலையிலிலிருந்து இறங்கும் போது பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என்று குரல் எழுப்பினர். மறுநாள் உற்சவர் கிராமத்தில் வீதி உலா முடித்துக் கொண்டு அருகில் உள்ள தாமிரபரணி நதிக்கரைக்கு வந்தார். பின்னர் உற்சவருக்கு வெள்ளைசாத்தி மீன் விளையாட்டு நடந்தது. தொடர்ந்து சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. பச்சைசாத்தி உற்சவர் மீண்டும் பொன்சப்பரத்தில் எழுந்தருளி மீண்டும் மலை மேல் ஏறினார். வருடத்திற்கு ஒருமுறை உற்சவர் மலையிலிருந்து கீழே இறங்குவதை காண ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதற்காக அரசு மற்றும் தனியார் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. ஸ்ரீவை., அறநிலையத்துறை செயல் அலுவலர் ராமசுப்பிரமணியன், ஸ்ரீவை., கள்ளபிரான் கோயில் ஸ்தலத்தார் வெங்கடாச்சாரி ஆகியோர் பூஜைகளுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். செய்துங்கநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமையிலும் போலீசார் சிறப்பு பாதுகாப்புக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். கருங்குளம் பஞ்.,தலைவி ஜெயலெட்சுமி சுடலைமணி குடிநீர் உட்பட அடிப்படை தேவைகளை செய்திருந்தார்.