திட்டக்குடி: ராமநத்தம் அருகே நள்ளிரவில் கோவில் உண்டியலை திருட முயற்சி செய்த சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம், ராமநத்தம் அடுத்த வெங்கனூர் கிராமத்தில் வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. நேற்று நள்ளிரவு ஒரு மணி அளவில் கோவிலுக்குள் இருந்த உண்டியலை மர்ம நபர்கள் பெயர்த்து எடுத்தனர். கோவிலின் பின்புறம் வழியாக உண்டியலை எடுத்துச் செல்ல முயன்றனர். அப்போது அங்கு இயற்கை உபாதை கழிக்க வந்த அருகிலுள்ள வீட்டைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் கூச்சலிட்டதால் உண்டியலைப் போட்டு விட்டு திருடர்கள் தப்பி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த ராமநத்தம் போலீசார் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர். மேலும் கோவிலில் உள்ள சிசிடிவி பதிவுகளை வைத்து திருடர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கிராமத்தின் முக்கிய பகுதியில் உள்ள கோவிலில் உண்டியலை திருட முயற்சித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.