பதிவு செய்த நாள்
11
ஜூன்
2020
12:06
உத்திரமேரூர் : உத்திரமேரூர், அங்காள பரமேஸ்வரி கோவில் குளக்கரை அருகே, 12ம் நுாற்றாண்டைச் சார்ந்த துண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது. உத்திரமேரூர் வரலாற்று ஆய்வு மைய தலைவர் பாலாஜி தலைமையிலான குழுவினர், உத்திரமேரூர் வட்டாரத்தில், கள ஆய்வில் ஈடுபட்டனர். அப்போது, 71 செ.மீ., நீளமும், 33 செ.மீ., அகலமும் உடைய கல்வெட்டை, நேற்று கண்டெடுத்தனர்.இது குறித்து, வரலாற்று ஆய்வு மைய தலைவர் சு.பாலாஜி கூறியதாவது: உத்திரமேரூர் அங்காள பரமேஸ்வரி கோவில் குளக்கரை அருகே, கற்குவியல்களுக்கு இடையில், கேட்பாரற்று கிடந்த கல்வெட்டில், நான்கு வரிகள் மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளன. இது, துண்டு கல்வெட்டு என்பதால், நான்கு வரிகளும் தொடர்பின்றி உள்ளது.மேலும், இக்கல்வெட்டில், ஆண்டு, மன்னர் பெயரும் இல்லை. இதனால், இதன் பொருளை முழுமையாக அறிய இயலவில்லை.இருப்பினும், அதன் எழுத்து அமைப்பைக் கொண்டு, இது பிற்கால சோழர் காலத்தை சார்ந்த, 12ம் நுாற்றாண்டின் இறுதி பகுதியாக இருக்கலாம். உத்திரமேரூரில் உள்ள பட்டண் என்பவரும், அவரது தம்பியும், 40 பழங்காசுகளை, கோவில் திருப்பணிக்காக அளித்ததாக செய்தி உள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.பழமையான இக்கல்வெட்டு, மண்ணில் புதைந்து போகும் நிலை உள்ளதால், இதை மீட்டு, தொல்லியல் துறையினர் பாதுகாக்க வேண்டும் என, வரலாற்றுஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கல்வெட்டில் இருந்த எழுத்து இது தான்!த்து தளியூர் உத்தரமேரு வீரரன் பட்டனும் தன் தம்பி இப் பழங்காசு நாற்பதுக்வுலான் பட்டன் எழுத்து.