கேரளாவிலுள்ள ஆலப்புழா மாவட்டம் மருத்தோர் வட்டம் சேர்த்தலாவில் தன்வந்திரி கோயில் உள்ளது. இங்கு வழிபட்டால் நோய்நொடி இல்லாத நல்வாழ்வு அமையும். தலவரலாறு: வயலார் கிராமத்தைச் சேர்ந்த தம்பான் இனத்தை சேர்ந்த ஒருவர், நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டார். பலரிடம் வைத்தியம் பார்த்தும் பலனில்லை. வைக்கத்திலுள்ள சிவன் கோயிலுக்கு சென்று வைக்கத்தப்பன் சுவாமியை தரிசித்தார். வலி குறைந்தது. கோயிலை விட்டு வெளியே வந்தவுடன் மீண்டும் வலி ஏற்பட்டது. எனவே கோயிலிலேயே தங்கினார். அன்றிரவு கனவில் தோன்றிய சிவன், ‘‘பக்தனே! இந்த கோயிலை விட்டு வெளியே சென்றால் மறுபடியும் வலி ஏற்படும், எனவே இங்கிருந்து சேர்த்தலைக்கு செல்! அங்குள்ள கேளம் குளத்தில் முழ்கு. நீருக்கடியில் மூன்று சிலைகள் கிடைக்கும். முதலில் கிடைக்கும் சிலை சக்தி வாய்ந்ததால் அதைக் குளத்திலேயே விட்டு விடு, இரண்டாவது சிலையை அந்தணருக்கு தானமாக கொடு. மூன்றாவது சிலையை பிரதிஷ்டை செய், அப்போது நோய் தீரப் பெறுவாய்’’ என்றார். அதன்படியே இரண்டாவதாக கிடைத்த சிலையை வெள்ளுடு என்னும் மனையை சேர்ந்த நம்பூதிரிக்கு தானம் அளித்தார். அவர் அதை தன்னுடைய வீட்டிலேயே வைத்து வழிபட்டு வந்தார். சில ஆண்டுகளுக்கு பிறகு மண்மூசு என்பவரின் உதவியுடன் தன்வந்திரியை பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினார். இரண்டு குடும்பத்தினரும் நிர்வாகத்தை நடத்தி வந்தனர். இவர்களுக்கு பிறகு வந்த தலைமுறையில் கோயில் யாருக்கு சொந்தம் என்ற பிரச்னை எழுந்தது. இதில் மண்மூசு குடும்பத்தினர் சிலையின் கையை உடைத்து எடுத்துச் சென்றனர். கோட்டயம் அருகிலுள்ள ‘ஓளச்ச’ என்னும் இடத்தில் பிரதிஷ்டை செய்து கோயில் கட்டினர். வெள்ளுடு நம்பூதிரியின் குடும்பத்தினர் கை உடைந்த சிலையை மருத்தோர் வட்டத்தில் பிரதிஷ்டை செய்தனர். உடைந்த கையையும் வெள்ளியினால் செய்து பொருத்தினர். இங்கு சுவாமி மேற்கு நோக்கியுள்ள வட்ட வடிவ சன்னதியில் காட்சியளிக்கிறார். சுவாமியின் இடது கையில் வெள்ளியால் ஆன அட்டைப்பூச்சி உள்ளது. கிருமிகள் ரத்தத்தில் இருப்பதால் அட்டை மூலம் ரத்தத்தை உறிஞ்சச் செய்வது அக்காலத்தில் வழக்கம். அந்த வகையில் சுவாமியின் இடக்கையில் வெள்ளியால் செய்த அட்டைப்பூச்சி உள்ளது. இக்கோயிலில் முக்குடி என்னும் மருந்து, பச்சை மருந்து ஆகியவற்றை தயிரில் கலந்து இங்கு தயாரிக்கின்றனர். பூஜையின் போது மருந்து தன்வந்திரியின் கையிலுள்ள தங்கக் குடத்தில் வைக்கப்படும். இதைப் பருகினால் நோய்கள் விலகும். குணம் அடைந்தவர்கள் சுவாமிக்கு வெண்ணெய், சந்தனக்காப்பும் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். அலுவலகத்தில் முன்பதிவு செய்து பக்தர்கள் மருந்தைப் பெறலாம். ஆஸ்துமா, வாத நோய் தீரவும், நினைத்தது நிறைவேறவும் ‘கயற்றேல் வானம்’ என்னும் பூஜை நடத்துகின்றனர். அமாவாசையன்று நடக்கும் பிதுர் வழிபாட்டில் காட்டு சேப்பங்கிழங்கில் தயாராகும் தாள்கறி நிவேதனம் செய்வர். இந்த கிழங்கை தொட்டவருக்கு கையில் அரிப்பு ஏற்படும். அப்படிப்பட்ட இக்கிழங்குடன் மூலிகைகளைச் சேர்த்து தயாரிக்கும் மருந்து பூஜையில் இடம்பெறும். இதைச் சாப்பிடுவோருக்கு நீண்டகால நோய் கூட மறையும். எப்படி செல்வது: எர்ணாகுளத்திலிருந்து சேர்த்தலா 40 கி.மீ., அங்கிருந்து 2 கி.மீ., விசேஷ நாட்கள்: ஆவணி திருவோணம், மாதந்தோறும் திருவோணத்தன்று பால் பாயாச வழிபாடு. சித்திரை உத்திரத்தன்று பிரதிஷ்டா தினம், ஐப்பசி தேய்பிறை துவாதசி தன்வந்திரி ஜெயந்தி நேரம்: அதிகாலை 5:00 – காலை 10.30 மணி, மாலை 5:00 – இரவு 8:00 மணி தொடர்புக்கு: 0478 – 282 2962 92491 13355 அருகிலுள்ள தலம்: வைக்கம் மகாதேவர் கோயில் (24கி.மீ.,)