திருச்சானூர் பத்மாவதி தாயார் பிரம்மோற்சவம்; துவஜாவரோஹனத்துடன் நிறைவடைந்து
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
26நவ 2025 12:11
திருச்சானூர்; திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் சிறப்பாக நடைபெற்று வந்த பிரம்மோற்சவம் கொடி இறக்கத்துடன் நிறைவடைந்தது. துவஜாவரோஹன நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர கார்த்திகை பிரம்மோற்சவ விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வருகிறது. தினமும் காலை மற்றும் இரவில் வாகன வீதியுலா நடைபெற்றது. தினமும் ஒவ்வொரு வாகனத்தில் தாயார் எழுந்தருளி மாடவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வந்தார். விழாவின் முக்கிய நிகழ்வாக நேற்று (25ம் தேதி) பஞ்சமி தீர்த்த உற்சவம் (சக்கரஸ்நானம்) நடைபெற்றது. புஷ்கரணியின் கரையில் உற்சவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று, தீர்த்தவாரி நடைபெற்றது. சக்கரத்தாழ்வாரை திருக்குளத்தில் மூன்று முறை மூழ்க செய்து தீர்த்தவாரி நடத்தப்பட்டது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருக்குளத்தில் புனித நீராடினர். தொடர்ந்து இரவு துவஜாவரோஹனம் எனும் கொடி இறக்கத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.