பதிவு செய்த நாள்
19
ஜூன்
2020
04:06
பீமனின் பேரனும், கடோத் கஜனின் மகனுமான பார் பாரிகாவை வட இந்திய மக்கள், குறிப்பாக ராஜஸ்தான் மாநிலத்தில் கிருஷ்ணரின் அம்சமாக வழிபடுகின்றனர். ஷ்யாம் பாபா மந்திர் என்ற பெயரில் ராஜஸ்தானில், காட்டூ என்ற கிராமத்தில் இவருக்கு ஒரு கோயில் அமைந்துள்ளது. கடோத்கஜன், பிராக்ஜோதிஷபுரத்தை (தற்போதைய அசாம்) ஆண்ட மன்னனின் மகளான காம்காந்தகா என்ற பெண்ணை மணந்து பார்பாரிகா என்ற மகனைப் பெற்றதாகவும், அவன் கிருஷ்ணரின் பெயரான ஷ்யாம் என்ற பெயரைத் தாங்கி ஷ்யாம் பாபாவாக வழிபடப்படுகிறார். தன்னை வணங்கி வழிபடுகின்ற அனைத்து பக்தர்களின் குறைகளும் தீர்ந்து, அவர்கள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று கிருஷ்ண பகவானிடம் ஷ்யாம் பாபா வரம் வாங்கியதாக உள்ள ஐதிகத்தையொட்டி, இவரை பக்தியோடு வழிபட்டால் தங்கள் துன்பங்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.
ஷ்யாம் பாபா குறித்து புராண சம்பவம் ஒன்று கூறப்படுகிறது. சிறு வயதிலேயே சிறந்த வீரனாக விளங்கிய ஷ்யாம் பாபா, குப்த க்ஷேத்திரம் என்ற இடத்திற்குச் சென்று, அவரது அருளால் தெய்வீக சக்தி கொண்ட மூன்று அம்புகளைப் பெற்றார். எனவே அவருக்கு மூன்று அம்புகளைத் தாங்கிய வீரர் என்று பொருள்படும் தீன் பாண் தாரி என்ற சிறப்புப் பெயர் ஏற்பட்டது. மேலும் அக்னி பகவான் ஷ்யாம் பாபாவின் பக்திக்கு மெச்சி மூன்று உலகங்களையும் வெற்றி கொள்ளக்கூடிய ஆற்றல் வாய்ந்த வில்லையும் அவருக்கு அளித்தார். பாண்டவர்களுக்கும் கவுரவர்களுக்கும் குருக்ஷேத்திரத்தில் போர் துவங்கவிருப்பதை அறிந்த ஷ்யாம் பாபா, தான் அந்தப் போருக்குச் செல்லவிருப்பதாகவும், ஒருக்கால் தான் அதில் பங்கேற்க நேரிட்டால் தோற்கவிருக்கும் அணியோடு தான் சேர்ந்து போரிட விரும்புவதாகவும் கூறி, தன் தாயிடம் அனுமதி பெற்று போருக்கு கிளம்பினார்.
பார்பாரிகாவின் உள்ளத்தை அறிந்த கண்ணபிரான், ஓர் அந்தணர் வடிவில் அவரை வழிமறித்து, வெறும் மூன்று அம்புகளோடு எவ்வாறு யுத்தத்தில் கலந்து கொண்டு, நீ வெற்றி பெற முடியும்? என்று கேட்டார். பார்பாரிகா, என்னிடம் உள்ள மூன்று அம்புகளில் முதல் அம்பு அழிக்கவிருக்கும் சைனியத்தை அடையாளம் கண்டு கொண்டு திரும்பி விடும்; இரண்டாவது அம்பு, யார் யார் பாதுகாக்கப்பட வேண்டியவர்களோ அவர்களின் <உயிரைக் காப்பாற்றும். மூன்றாவது அம்பு மற்ற அனைவரையும் அழித்து ஒழிக்கும் என்று கூறினார். பார்பாரிகா, கவுரவர்கள் பக்கம் நின்று போரிட்டால், பாண்டவர்கள் அழிய நேரிடும் என்பதை உணர்ந்த கிருஷ்ணர், அவரிடம் போரில் கலந்து கொள்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தியதோடு, அவருடைய தலையையும் தானமாகக் கேட்டார். தான் வஞ்சிக்கப்பட்டதை உணர்ந்த பார்பாரிகா, கிருஷ்ண பகவானிடம் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். மேலும் கிருஷ்ணருடைய பெயரான ஷ்யாம் என்ற நாமத்தோடு தான் வணங்கப்படவேண்டும் என்றும்; தன்னை வணங்கும் அனைத்து பக்தர்களின் துன்பங்களும் தீரவேண்டும் என்றும் வரங்களை கேட்டுப் பெற்றாராம். பார்பாரிகா வரம் பெற்ற நாள் பங்குனி மாதம் சுக்லபட்ச துவாதசி செவ்வாய்க் கிழமையாகும்.
பார்பாரிகா தன் சிரசை தானம் செய்ததால் அவருக்கு ஷீஸ் கீ தானி (சிரசை தானம் செய்தவர்) என்ற பெயரும் ஏற்பட்டது. கிருஷ்ணருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பார் பாரிகாவின் சிரசு, ரூபவதி ஆற்றில் மூழ்கி கிடந்த தாகவும், கலியுகம் துவங்கி பல ஆண்டுகள் கழிந்தபின்னர், ராஜஸ்தான் மாநிலத்தில் காட்டூ என்ற கிராமத்தில் அது கண்டெடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. அப்போது இப்பகுதியினை ஆண்டு கொண்டிருந்த ரூப் சிங் சவுஹான் என்ற மன்னரின் கனவில் ஷ்யாம் பாபா தோன்றி, தனக்கு ஒரு கோயில் எழுப்புமாறு ஆணையிடவே, மன்னரும், ராணி நர்மதா கன்வாரும் முயற்சி எடுத்து இப்போதைய கோயிலை 1027- ம் ஆண்டு எழுப்பியதாக கோயில் வரலாறு குறிப்பிடுகிறது. 1720-ம் ஆண்டு திவான் அபைசிங் கோயிலை விரிவுபடுத்தியிருக்கிறார். காட்டூ கிராமத்தில் கண்டெடுக்கப்பட்டதால் ஷ்யாம் பாபா, காட்டூ ஷ்யாம் என்று இப்பகுதி மக்களால் அழைக்கப்படுகிறார். கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள காட்டூ ஷ்யாம் பாபாவின் சிரசு ஓர் அரிய வகை கல்லில் வடிக்கப்பட்டுள்ளது. கருவறைக் கதவுகளில் நுணுக்கமான வேலைப்பாடுகள் கொண்ட வெள்ளித் தகடுகள் பொருத்தப்பட்டுள்ளது.
பளிங்குக் கற்களால் கட்டப்பட்டுள்ள கோயிலின் மகாமண்டபத்தின் சுவர்களை புராணக் கதைகளைச் சித்திரிக்கும் அழகிய வண்ண ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. கோயில் வளாகத்தில் ஷ்யாம் குண்ட் என்ற புனித தீர்த்தக்குளம் உள்ளது. இதில் தான் ஷ்யாம் பாபாவின் சிரசு கண்டெடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பக்தர்கள் இதில் நீராடி ஷ்யாம் பாபாவை வழிபடுகின்றனர். கோயில் வளாகத்தில் தென் கிழக்கில் கோபிநாத் சன்னதியும், அருகில் கவுரிசங்கர் சன்னதியும் உள்ளன. அன்னியர் படையெடுப்பின் போது ஔரங்கசீப்பின் படைவீரர்கள் இந்த சிவன்கோயிலைத் தகர்த்து ஈட்டியால் லிங்கத்தைக் குத்தியபோது ரத்தம் பீறிட, அவர்கள் பயந்து இந்த இடத்தை விட்டு ஓடிவிட்டார்களாம். ஈட்டி குத்தப்பட்ட அடையாளம் இப்போதும் சிவலிங்கத்தில் உள்ளது. இந்த கோயிலில் ஜன்மாஷ்டமி, ஜல் ஜூலானி ஏகாதசி, ஹோலி, வசந்த பஞ்சமி ஆகிய நாட்கள் முக்கிய விழா நாட்களாகும். பங்குனி மாதம் தசமி முதல் துவாதசி வரை ஷ்யாம் பாபாவுக்கு நடைபெறும் பிரம்மாண்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.