அடாத மழையிலும் விடாது நெல்லையப்பருக்கு நடக்கும் பூஜை; வெள்ள நீரில் நீந்தி சென்று தீர்த்தம் எடுத்த அர்ச்சகர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25நவ 2025 12:11
திருநெல்வேலி; திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டிருந்தாலும், அதை பொருட்படுத்தாது திருநெல்வேலி நெல்லையப்பர் சுவாமிக்கு நித்திய திருமஞ்சனத்திற்காக தீர்த்தம் எடுத்துச் சென்ற கோவில் அர்ச்சகர்கள்.
தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில் ஒன்றான திருநெல்வேலி நெல்லையப்பர் திருக்கோவிலில், நித்திய திருமஞ்சனத்திற்காக தாமிரபரணி ஆற்றில் இருந்து தினமும் கோவில் அர்ச்சகர்கள் தீர்த்தம் எடுத்து செல்வது வழக்கம். திருநெல்வேலி மாவட்டத்தில் தொடர்ச்சியான கனமழையால் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது ஆற்றில் சுமார் 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் பாய்ந்து கொண்டிருக்கிறது. இருந்தபோதிலும், நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக, கோவில் அர்ச்சகர்கள் மழை, வெள்ளம் என எதனையும் பொருட்படுத்தாது தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி, சுவாமி நெல்லையப்பருக்கு செப்பு குடத்தில் தீர்த்தம் எடுத்து சென்றனர்.
1992, 2023 போன்ற வெள்ளக் காலங்களிலும், கொரோனா பேரிடர் தொற்று காலத்திலும் கூட, சுவாமி நெல்லையப்பருக்கு தீர்த்தம் எடுத்துச் செல்லும் பணி தடைபடாமல் தொடர்ந்து நடைபெற்றது. கோவில் யானை காந்திமதி இருந்த காலங்களில், யானையின் மீது தீர்த்தம் எடுத்துச் சென்று சுவாமி நிலைபெருக பூஜை நடைபெற்றது. தற்போது யானை இல்லாத நிலையிலும் கூட, சுவாமியின் நித்திய பூஜைகள் தடைபடக்கூடாது என்பதற்காக எந்த சூழலையும் பொருட்படுத்தாது தீர்த்தம் எடுத்து கைங்கரியத்தை செய்து வருவதாக அர்ச்சகர்கள் தெரிவித்தனர்.