பதிவு செய்த நாள்
25
ஜூன்
2020
10:06
சென்னை; சென்னை, வடபழநியில் நேற்று நடந்த திருமணங்களில், ஊரடங்கையும் மீறி, திருமண மண்டபங்களில் அதிகம் பேர் குவிந்தனர்.
ஊரடங்கு விதிகள் நடைமுறையில், எந்த அளவு குளறுபடிகள் உள்ளது என்பதற்கு இதுவே சான்று.வடபழநி ஆண்டவர் கோவிலில் திருமணம் நடத்துவது சிறப்பு என்பதால், முகூர்த்த நாட்களில் நிறைய பேர் இங்கு திருமணம் நடத்த விரும்புவர். இதனால், கோவிலை சுற்றியுள்ள வீடுகளை எல்லாம், குட்டி குட்டி திருமண மண்டபங்களாக மாற்றி விட்டனர
மேற்கு கோபுரம் உள்ள, 12 அடி அகல சிறு தெருவில் கூட, மூன்று திருமண மண்டபங்கள் உள்ளன. திருமண நாட்களில், இங்கு ஏற்படும் இரு சக்கர வாகன நெரிசலால், கார் போன்ற வாகனங்கள் எதுவும், இந்த தெருவில் நுழைய முடியாது.கார் போகாவிட்டாலும் பரவாயில்லை; ஏதாவது அசம்பாவிதம் நடந்தால், அவசரத்திற்கு உதவுவதற்கு ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட உள்ளே நுழைய முடியாது.
தரிசிக்க வாய்ப்பில்லை: ஊரடங்கு காலத்தில், வடபழநி ஆண்டவர் கோவில், அரசின் சட்ட விதிகளுக்கு உட்பட்டு பூட்டிக் கிடக்கிறது. திருமண ஜோடிகளோ அல்லது அவர்களை சார்ந்தவர்களோ, தற்போது முருகனை தரிசிக்க வாய்ப்பில்லை. ஆனாலும், வடபழநியில் திருமணம் நடத்துவதே சிறப்பு என்று கூறி, கோவிலை சுற்றிஉள்ள திருமண மண்டபங்கள், மக்களை சுண்டி இழுக்கின்றன.
முகூர்த்த நாட்களில், மற்ற மண்டபங்கள் எல்லாம் காற்றாடுகையில், இங்குள்ள மண்டபங்களில் திருமணங்கள் நடந்த வண்ணம் உள்ளன.இங்கு கட்டப்பட்டுள்ள திருமண மண்டபங்கள், சட்டப்படி அனுமதி பெறப்பட்டுள்ளனவா என்பது தெரியாது. ஆனால், இவ்வளவு சின்ன இடத்தில், எப்படி திருமண மண்டபங்கள் முளைத்தன?ஏற்கனவே பதிவு செய்த திருமணங்கள் மட்டுமே நடத்தப்பட வேண்டும்; புதிதாக மண்டபங்களில் திருமணம் நடத்த, புக்கிங் செய்யக்கூடாது என, அரசு உத்தரவிட்டுள்ளது.மேலும், பெரிய மண்டபங்களிலேயே, 50 பேருக்கு மேல் திருமணத்தின் போது கூடுவது கூடாது. ஆனால், வடபழநி கோவிலை சுற்றியுள்ள மண்டபங்களில், இந்த விதிமுறைகள் எல்லாம் கடைப்பிடிக்கப்படாமல் காற்றில் பறக்க விடுவதாக தெரிகிறது.மக்களின் விருப்பம்நேற்று இங்கு நடந்த திருமணங்களில், மண்டபம் கொள்ளாமல், மக்கள் பங்கேற்றனர். இவர்களில் பலர் முக கவசம் அணியவில்லை; சமூக இடைவெளியையும் சுத்தமாக கடைப்பிடிக்க வில்லை. வருமானத்தை மட்டுமே பிரதானமாக வைத்து, மண்டபங்கள் இயங்கும் நிலையில், மாநகராட்சி அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள் என, யாரும் கண்டு கொள்ளவில்லை. அப்புறம் எப்படி, சென்னையில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வரும். இனியாவது அதிகாரிகள் மக்கள் நலனில் அக்கறை செலுத்தி, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் விருப்பம்.