பதிவு செய்த நாள்
14
மே
2012
10:05
ஆழ்வார்குறிச்சி : கடையம் கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயிலில் நேற்று வருஷாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கடையம் பஸ் ஸ்டாண்ட் அருகே கைலாசநாதர் - பஞ்சகல்யாணி அம்பாள் கோயில் உள்ளது. இங்கு கடந்த 2009ம் ஆண்டு ஏப்.20ம் தேதி அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து நேற்று நடந்த 3வது வருஷாபிஷேக விழாவில் காலை அனுக்ஞை, கணபதி பூஜை, சங்கல்பத்துடன் நிகழ்ச்சிகள் துவங்கியது. பின்னர் கும்ப பூஜை, ஹோமம், ருத்ர ஏகாதசி ஜெபம், சிறப்பு பூஜைகள் நடந்தது. விழா பூஜைகளை ராஜவல்லிபுரம் கணேசபட்டர் தலைமையில் சென்னை குப்புசாமிபட்டர், கடையம் சுப்பிரமணியபட்டர், சுந்தர்பட்டர், முத்துக்குமாரசாமிபட்டர், ரவணசமுத்திரம் கிருஷ்ணபட்டர், சிவகணேஷ்பட்டர் நடத்தினர். முன்னதாக அலங்கரிக்கப்பட்ட கும்பம் மேளதாளங்களுடன் எடுத்து வரப்பட்டு சுவாமி விமான அபிஷேகத்தை சுந்தர் பட்டரும், அம்பாள் விமான அபிஷேகத்தை சென்னை குப்புசாமிபட்டரும், கோபுர விமான அபிஷேகத்தை சிவகணேஷ்பட்டரும் நடத்தினர். பின்னர் சிறப்பு பூஜைகள் நடந்தது. மதியம் 12 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை சுவாமி அம்பாள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தனர். இரவு திருக்கல்யாணம், புஷ்பாஞ்சலி, தீபாராதனையும், பின்னர் விநாயகர், சுவாமி, அம்பாள் வீதிஉலாவும், பைரவர் சிறப்பு அலங்காரமும், தீபாராதனையும் நடந்தது. வருஷாபிஷேக விழாவில் பணிநிறைவு நல்லாசிரியர் கே.எஸ்.மீனாட்சிசுந்தரம், முன்னாள் பஞ்., தலைவர் கோமதிநாயகம், சத்திரம் பாரதி மேல்நிலைப்பள்ளி செயலர் சேதுராமன், பணிநிறைவு தாசில்தார் கல்யாணசுந்தரம், பல்க் சங்கரலிங்கம், பணிநிறைவு தலைமையாசிரியர் முருகன், சிங்கப்பூர் ராஜூ, பணிநிறைவு தொழிலாளர் நல ஆய்வாளர் அம்பலவாணன், கடையம் யூனியன் சேர்மன் சீனிவாசுகி, சிவபாலன், ஐயப்பன், பாலாஜி, அம்பை தாலுகா வாணியர் சங்க தலைவர் திருமலையப்பபுரம் சுப்பிரமணியன், லயன்ஸ் சங்கம் கோபால், தெற்கு கடையம் இளைஞர் காங்., தலைவர் பாரதிராஜன், சமையல் பழனியாபிள்ளை, பாண்டியன், மாணிக்கம் உட்பட திருவாசகம் முற்றோதுதல் குழுவினர், கைலாசநாதர் பக்த பேரவையினர், அன்னதான கமிட்டியினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி முருகன் மேற்பார்வையில் கைலாசநாதர் பக்த பேரவை, அன்னதான கமிட்டி மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.