பதிவு செய்த நாள்
26
ஜூன்
2020
11:06
திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில், கோவில்களில், திட்டமிட்டபடி திருப்பணிகள் மேற்கொள்ள இயலாததால், கும்பாபிஷேகம் தாமதமாகும் நிலை உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில், அவிநாசி அவிநாசிலிங்கேஸ்வரர் திருப்பூர் விஸ்வேஸ்வரர், வீரராகவப்பெருமாள், திருமுருகன்பூண்டி திருமுருகநாதசுவாமி உட்பட அனைத்துக்கோவில்களும் மூடப்பட்டுள்ளன.
ஊரடங்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், வழிபாட்டு தலங்களை திறக்க வேண்டும் என்று, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், வழிபாட்டு தலங்களை திறக்க அரசு அனுமதி வழங்கவில்லை.கும்பாபிேஷகம் சந்தேகம்!திருப்பூர் மாவட்டத்தில், பல்வேறு கோவில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தன. ஊரடங்கால், அவை தடைபட்டன. தற்போதும், அதை முடுக்கிவிட இயலவில்லை. மேலும், பொருளாதார நெருக்கடி இருப்பதால், திருப்பணிக்கு தேவையான நிதியை சேகரிப்பதிலும் சிக்கல் உள்ளது.இதனால், இந்தாண்டு கும்பாபிேஷகம் நடத்த திட்டமிடப்பட்ட கோவில்களில், கும்பாபிஷேகம் நடைபெறுவது சந்தேகமே என திருப்பணியில் ஈடுபட்டோர் கூறுகின்றனர். இதுகுறித்து, பூண்டியில் உள்ள சிற்பக்கலைஞர்கள் சிலர் கூறுகையில், திருப்பணிகளையொட்டி பல்வேறு சிலைகளுக்கு ஆர்டர் கொடுத்தவர்கள் கூட வாங்கிச் செல்லவில்லை. கோவில்கள் திறக்க அனுமதிக்கும் போது தான் வாங்கிச் செல்வர். திருப்பூர் மாவட்டம் என்றில்லாமல், பல்வேறு மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு தேவையான சிலைகள் பலவும் தயாரிக்கப்பட்டு, அனுப்பப்படாமல் உள்ளன. மேலும், புதிய ஆர்டர்கள் இல்லாமல் தவிக்கிறோம் என்கின்றனர்.
எப்போது திறப்பு?இந்து அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு அனுமதி அளித்தால், கோவில்கள் அனைத்தையும் திறக்கவும், உரிய பூஜைகளை நடத்தவும் தயார் நிலையில் உள்ளோம். பக்தர்கள் வராவிட்டாலும், தினமும் நடத்த வேண்டிய பூஜைகள் நடத்தப்பட்டுதான் வருகின்றன. கோவிலில் தினசரி பூஜைகள் நடைபெற்ற போதும், உற்சவங்கள், விழாக்கள் எதுவும் நடத்தப்படாததால், பக்தர்கள் ஆதங்கத்துடன் உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.