முதல் கடவுளான விநாயகர் வழிபாடு சமீப காலத்தில் ஏற்பட்டதாகவும், சங்கக் காலத்தில் இவர் வழிபாடு இல்லை என்றும் சிலர் கருதுகின்றனர். சிறுத்தொண்டர் என்னும் பரஞ்சோதி முனிவர் மூலம் வாதாபியில் இருந்து விநாயகர் சிலை கொண்டு வரப்பட்டதாகவும் கூறுகின்றனர். சங்க இலக்கியமான பரிபாடல் என்னும் நுாலில் விநாயகர் பற்றிய குறிப்பு உள்ளது. ‘‘முக்கை முனிவ! நாற்கை அண்ணல்! ஜங்கை மைந்த! அறுகை நெடுவேள்!’’ திருமாலைப் போற்றும் இப்பாடல், ‘‘திருமாலாகிய நீயே முக்கை முனிவன் என்னும் தவத்தில் இருக்கும் சிவனாகவும் நாற்கரத்தோன் ஆகிய பிரம்மாவாகவும், ஐந்து கைகளை கொண்ட விநாயகராகவும், ஆறுகைகளை உடைய முருகனாகவும் இருக்கிறாய்’’ எனச் சங்கப்புலவர் பாடியுள்ளார். இதில் விநாயகர் ‘ஐங்கை மைந்தன்’ என அழைக்கப்படுகிறார். இந்துமதக் கடவுள்களில் ஐந்துகைகள் கொண்டவர் விநாயகர் ஒருவரே என்பது குறிப்பிடத்தக்கது.