பதிவு செய்த நாள்
15
ஆக
2020
12:08
சாமான்யன் சாமி இல்லை;
சாமி சாமான்யன் இல்லை.
இந்த அசரீரி, ஆசீர்வாதம், ஞானம் தந்தது வேறு யாருமில்லை. அசாம் மாநிலத்துக் காவல் தெய்வம், மனித குலத்தின் மூலாதாரம், பிரபஞ்சத்தைக் காத்து நிற்கும் பேரரசி அன்னை காமாக்யா.
அசாமில் கவிஞர்கள் விழாவில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. கவிதை சொல்லும், கேட்கும் மகிழ்ச்சி, கூடுதலாக என் கனவு தேவதை, காலம் காலமாகக் காத்து நிற்கும் அம்மையின் பெருவடிவம் காமாக்யா தேவியை தரிசிக்கும் தாகமும், ஏக்கமும் எனக்குள் கூடு வைத்தது.
எத்தனை வருஷத்து உணர்வு இது. நுால்களில் வாசித்தேன். தரிசித்து வந்தவர்கள் சொன்னதைக் கேட்டு யோசித்தேன்.
‘உன் தரிசனத்துக்குக் காத்துக் கிடக்கும் மகளின் பரிதவிப்பும், பரபரப்பும் புரியவில்லையா தாயே....? என்னை அழைக்க மாட்டாயா ? திருமுக தரிசனம் அளிக்க மாட்டாயா ? ’
இப்படித்தான் தினம் தினம் காமாக்யாவிடம் வேண்டினேன் என்பது அவளுக்குத் தெரியும். அதனால் கவிதைக்
காரணம் காட்டி அவள் என்னை அழைத்த நேரத்தில் மனசு பூரித்தது. மகளின் மனசு, உணர்வு அம்மாவுக்குத் தெரியும்.
அசாம் சென்றேன்.
கவுகாத்தி நீலாச்சல் குன்றுப் பகுதி. மேலே அகலமான படிகளில் ஏறினால் காமாக்யா
தரிசனம். அதற்கும் முன், திருக்கோயில் அருகிலுள்ள கடைகள், அங்குள்ள அன்பு மக்கள், சர்சர்ரென்று பறக்கும்
வாகனங்கள் – இவையெல்லாம் இப்போதுள்ள வசதிகள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வசதிகள் இல்லாத காலத்தில் கட்டப்பட்டது இந்த கோயில் என்பது பிரமிப்பாக இருக்கிறது.
முன்னோர் உயரமான மலைகளையும், குன்றுகளையும் கண்டறிந்து மனிதர்கள் உய்வதற்கான
கோயில்களை நிர்மாணித்திருக்கிறார்கள். ‘சிற்றின்பத்திலேயே உன்னைத் தொலைத்து விடாதே..... இறைமை என்னும் பேரின்பத்துக்கும் நெகிழ்ந்து கிடந்தால் மகிழ்ந்து செழிக்கலாம்’என்ற புரிதலோடு உருவாக்கியிருக்கிறார்கள்.
நாம் தான் அந்த இடங்களை மலை வாசஸ்தலமாக, கேளிக்கை இடமாக நினைக்கிறோம்.
காமாக்யா திருக்கோயில் குன்றின் மீது கம்பீரமும், காருண்யமுமாக தெய்வீகமும், தீட்சண்யமும் நமக்காகத்
காத்திருக்கிறது.
திரிபுரசுந்தரி, மாதங்கி, கமலாதேவி கருவறைகள் காமாக்யா கோயிலில்
உள்ள தேவியர்கள்.தென்னிந்திய கோயில்கள் நிர்மாண அமைப்புக்கும் வட இந்திய அமைப்புக்கும்
வேறுபாடுகள் உண்டு. ஆனால் தெய்வீக அதிர்வுகளும், உய்விக்கும் ஆசீர்வாதமும் எல்லா தலங்களிலும் ஒரே மாதிரி தான் இருக்கின்றன.
வித்தியாசமான கூம்பு கோபுர அமைப்பும் கலசமும் வெளிர் மஞ்சள் வண்ண சுற்றுப்புறமுமாக இருக்கிறாள் காமாக்கியா.
தாட்சாயிணியின் உடல் கூறுகள் சிதறுண்டு விழுந்த தலங்கள் தான் 51 சக்தி பீடங்களாக வழிபடப்படுகின்றன. சிவபெருமான் மனைவி தாட்சாயிணி, தந்தை தட்சனின் யாகத்துக்கு, கணவன் சொல்லை மறுத்து, விரும்பிச் செல்கிறாள். ஏற்கனவே மருமகன் சிவனை அவமதித்த தட்சன், மகள் தாட்சாயிணியையும் அவமானம் செய்கிறான். யாக நெருப்பில் விழுந்து உயிர் துறக்கிறாள் தாட்சாயிணி. சிவனின் ஆக்ரோஷத்தின் வியர்வைத் துளிகளில் ஒன்று வீரபத்திரனாகிறது. தட்சனை அழிக்க வீரபத்திரன் செல்ல, தாட்சாயிணி உடலோடு சிவன் திக்கெலாம் அலைகிறார்... தாட்சாயிணியின் உடலைத் திருமால் சக்கராயுதத்தினால் தகர்க்கிறார். தாட்சாயிணியின் உடல் பாகங்கள் பூலோகத்தின் பல இடங்களில் சிதறி விழ, அந்த இடங்களே 51 சக்தி பீடங்கள். தாட்சாயிணியின் யோனி விழுந்த இடம் காமாக்யா திருக்கோயில். உள்புறம், பிரகாரம் எதுவுமே கூட்ட நெரிசல் இல்லாமல் இருந்தன. வேண்டியவருக்கான அண்மை தரிசனம் என்பதான முறைமைகள் இல்லாமல் இருந்ததே மனசுக்கு நிறைவாக இருந்தது.
‘காலை சென்று கலந்து நீர் மூழ்கிலென்?
வேலை தோறும் விதிவழி நிற்கிலென்?
ஆலை வேள்வி அடைந்தது வேட்கிலென்?
ஏல ஈசன் என்பார்க்கு அன்றி இல்லையே’
திருநாவுக்கரசரின் இந்த தேவாரம் தான் காமாக்யாவிடம் நான் கேட்க விரும்பியது. யானை போன்ற உருவத்திலிருக்கும் குகை என்பது தான் குவஹாத்தி அல்லது கவுகாத்தி. யானை குகை என்பது குன்றின் பெயர் மட்டுமா? குகையின் இருட்டை, யானையின் பேருருவம் அளவுக்கு நம் மனசில் சுமக்கிறோம். அஞ்ஞானம், விகாரம், கோபம். தாபம், ஆங்காரம், பொறாமை எல்லாவற்றையும் நுாற்றுக்கணக்கான யானை அளவுக்குச் சுமக்கிறோம். இந்த இருட்டெல்லாம் எப்போது மறையும்? தாட்சாயிணி தரிசனத்தால் மறையும்.
எது இறை அன்பு? இறை அச்சம்? இறை வழிபாடு? என்பதான பல கேள்விகளோடு காமாக்யா கோயில் போனேன். இரும்பு அகழிகளோடு உள்ளே நுழைய நுழைய இனம் புரியாத புல்லரிப்பு. ஒவ்வொரு ஜனனமும் இந்த நுழைவாயில் வழியாக தாயின் கருவறை திறந்து, யோனி பிளந்து பிறப்பது பிரபஞ்சத் தத்துவம். ஆனால் அந்த யோனி புனிதத்தின் குறியீடு எனக் கருதப்படாமல், இகழப்படுவது ஏன்? உயிர்த்துளை இல்லாமல் இந்த பிரபஞ்சம் இல்லை எனும் போது அதைச் சுமக்கும் பெண்ணும், பெண்மையும் அவமானச் சின்னங்களாகவே அறியப்படுவது ஏன்?
இதைத் தான் தேவாரத்தில் திருநாவுக்கரசரும் கேட்கிறார். குளித்து நீராடினால் போதுமா? அன்றாட வேலைகளைச் செய்து விட்டால் போதுமா? ஆடம்பர வேள்வி செய்து விட்டால் போதுமா? ஈசன் இதில் மட்டுமா? இதை தாண்டியும் தானே ஈசன் அருளை உணர வேண்டும் என்கிறார்.
அப்படி ஈசன் இருப்பை உணரும் தலம் தான் யோனித்தலமாகிய காமாக்கியா.
பெண் வெறும் போகப் பொருள் அல்ல. சிற்றின்பப் பொருள் அல்ல; சதைப் பொருளும் அல்ல. ஈசனுக்கும் பிரபஞ்சத்திற்கும் உயிர் தருபவள். உயிருக்கும் உயிர் தருபவள். அவளைக் கண்ணாரக் காணும் அந்த நொடியில், நம் ஆதி தொப்புள் கொடியின் வாசனை வீசியது காமாக்கிய கருவறையில்.
ஒவ்வொரு ஜனனத்திலும் கொப்பளிக்கும் பனிநீரும், குருதியும், பச்சை வாசனையும் அங்கே பொங்கி பிரவாகித்தது.
ஜீவநதிகளின் முகத்துவாரம் காமாக்கியா. உயிர் நதியின் ஆதித் தொப்புள் கொடி காமாக்கியா.
பிரமாண்டமாக இல்லை. எளிமை உச்சமாக உள்ளங்கை அளவு விளக்குகளின் வெளிச்சத்தில் ஜொலித்தாள் தாட்சாயிணி. அவளின் உயிர் நீர் தான் தரிசிப்பவர்களுக்கான பிரசாதம், தீர்த்தம் எல்லாம்.
நான் கேட்க நினைத்த கேள்விகள் வார்த்தையாகவில்லை. மவுனமாகவே தாட்சாயிணி சொல்லுகிறாள்.
‘என் உயிர் நீரும், உயிர்துளையும் இல்லாமல் இந்தப் பிரபஞ்சத்தில் எதுவுமே நிலைக்காது. இது புரியாமல் பெண்மையை அவமரியாதை செய்தால், சனாதனம் சொன்னால் அவர்களுக்கு சொல். அவர்களின் தாயை எட்டி உதைத்து விட்டு, கிரீடம் சூட்டிக் கொள்வது நிறைவாகாது. அது வாழ்வும் ஆகாது. எனக்கான பிரார்த்தனையுமாகாது’
போதும் தாயே......இந்த மவுன பதில் போதும் தாயே. - ஆண்டாள் பிரியதர்ஷினி