கலியுகத்தில் மானுடம் கடைத்தேற சொல்லப்பட்ட எளிய தர்மம் நாம ஜெபம். ஒரே நாமத்தை திரும்பத் திரும்ப சொல்வதால் மந்திர ஆற்றல் அதிகரித்து நன்மையளிக்கும். ஒலிக்கு அதிர்வலை உண்டு. அது நேர்மறையாக இருக்கும் போது நேர்மறை ஆற்றலை தருகிறது. நமது அகமும் புறமும் ஆற்றலைத் தந்து மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்த நாமங்களில் மிக சக்தி வாய்ந்த நாமம் "ராம நாமம்". நாராயணரின் தசாவதாரங்களில் ஒன்று ராம அவதாரம். ஒழுக்கமான வாழ்க்கை முறையை வாழ்ந்து காட்ட வேண்டும் என்று நாராயணர் எடுத்த அவதாரமே "ராம அவதாரம்". பெற்றோர் பேச்சை மீறக் கூடாது, உடன் பிறந்தோரிடம் அன்பு செலுத்த வேண்டும், எல்லா உயிரையும் உறவாக நினைக்க வேண்டும், பகைவனிடமும் பரிவு காட்ட வேண்டும் என்னும் தர்ம நெறிகளை பின்பற்றி வாழ்ந்து காட்டிய அவதாரமே "ராம அவதாரம்" கவிச்சக்கரவர்த்தி கம்பர் "நடையில் நின்றுயர் நாயகன்" என ராமனை போற்றுகிறார். ஒரு சொல், ஒரு வில், ஒரு இல் என்பது தர்மத்தின் வழிக்கு கிடைத்த பாராட்டு பட்டம். மனிதனாக வாழ்ந்த அவதாரம் ஆனதால் அவரது நாமமே இன்று நற்பலன்களைத் தருகிறது. இந்த நாமம் காட்டில் திருடனாக இருந்தவரை காவியம் பாட வைத்தது - வால்மீகி வைகுந்த பதவியே வலிய வந்தாலும் ஏற்காமல் ராம தரிசனமே போதும் என்று சொல்ல வைத்தது - அனுமன் காவிரிக்கரையில் அமர்ந்து கொண்டு பக்திப் பெருக்கான கீர்த்தனைகளில் திளைக்க வைத்தது - தியாகப் பிரம்மம் இன்னும் பல ஆயிரம் உதாரணம் சொல்லிக்கொண்டே போகலாம். இந்த மந்திரத்திற்கு தாரக மந்திரம் என்று பெயர்.
‘மும்மை சால் உலகுக்கு எல்லாம் மூல மந்திரத்தை, முற்றும் தம்மையே தமர்க்கு நல்கும் தனிப் பெரும் பதத்தை தானே இம்மையே, எழுமை நோய்க்கும் மருந்தினை, ‘இராமன்’ என்னும் செம்மை சேர் நாமம் தன்னை கண்களில் தெரியக் கண்டான்.’
இது வாலி ராம நாமத்தைப் பற்றி சொல்லுவதாக கம்பர் தந்த பாடல். நண்பர்கள் பாராட்டுவதில் என்ன சிறப்பு? பகைவன் பாராட்டும்படி வாழ்வதல்லவா சிறப்பு. இங்கு பகைவனே பக்தன் ஆகி பாராட்டி சொன்ன வரிகளே அதற்கு சாட்சி.
தாரக மந்திரம் என்றால் பிறவிகளை தாண்டச் செய்யும் சிறப்பு பெட்ரா மந்திரம் என்று பொருள். யோக நிலையைக் கூட சுலபத்தில் பெற இந்த நாமம் உதவும். "ரா" என்ற மூலாதாரத்தில் தொடங்கி "மா" என்ற தலை உச்சியில் உள்ள ஆயிரம் இதழ் தாமரை (சகஸ்ராரம்) வரை குண்டலி சக்தியை எழுப்ப பெரும் துணை செய்யும்.
இந்த நாமத்தை மூன்று முறை சொல்ல விஷ்ணு சகஸ்ரநாமம் படித்த பலன் கிடைக்கும். "ரா" என்ற எழுத்து 2 என்ற எண்ணிக்கையையும், "மா" என்ற எழுத்து 5 என்ற எண்ணிக்கையையும் குறிக்கும். "ராமா" - 2 X 5 = 10, ஒரு முறை "ராமா" என்ற நாமம் சொல்ல 10. "ராமா, ராமா, ராமா" - 10 X 10 X 10 = 1000. எனவே சகஸ்ர நாம அர்ச்சனை செய்த பலன் மூன்று முறை ராம நாமம் சொல்வதால் வரும்.
இதை எழுதும்போது நற்பலன் கிடைக்கும். ஸ்ரீராம ஜெயம் என்று சேர்த்துத்தான் எழுத வேண்டும். ஒன்றன்பின் ஒன்றாக ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ என்றும் பின்னர் ராம ராம ராம என்றும் எழுதக் கூடாது. ஸ்ரீராமர் போரில் வெற்றி பெற்ற தகவலை சீதைக்கு சொல்ல அனுமனால் உச்சரிக்கப்பட்ட நாமா இந்த ஸ்ரீராம ஜெயம் என்பது. அதை பிரித்து பிரித்து எழுதினால் பொருள் தராது. சேர்த்து எழுதுவதே சிறப்பு. எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் சொல்லுவதற்கு தகுதி படைத்த நாமம் இது. சொன்னாலும், கேட்டாலும் பலன் உண்டு. வாயார சொல்லி, மனமார நினைத்து செவி குளிர கேட்டு இன்புறுவோம்.