மகாபாரதக்கதையை வியாசர் சொல்ல விநாயகர் எழுதினார். பழங்காலத்தில் ஒரு நூலை உருவாக்கும் கிரந்தகர்த்தா ஒருவராகவும், அதனை எழுதுபவர் வேறொருவராகவும் இருப்பதுண்டு. ஓங்கார வடிவமாகவும், உலக இயக்கத்திற்கு காரணமாகவும், சிவசக்தி தம்பதியரின் மூத்த பிள்ளையாகவும் விளங்கிய விநாயகர் தன் நிலையில் இருந்து இறங்கி ஒரு குமாஸ்தாவைப் போல வியாசர் முன் அமர்ந்து, பாரதக்கதையை எழுதினார். தன் யானை முகத்துக்கு அழகு சேர்க்கும் தந்தத்தை ஒடித்து எழுத்தாணியாக்கி கொண்டார். மகாபாரதம் ஒரு தர்ம காவியம். உலகில் தர்மம் நிலைக்க வேண்டும் என்பதற்காக இந்த தியாகத்தைச் செய்தார். அலுக்காமல் சலிக்காமல் பாரதத்தின் லட்சம் ஸ்லோகங்களையும் எழுதி முடித்தார்.