பதிவு செய்த நாள்
18
மே
2012
10:05
சேலம்: சேலத்தில் உள்ள கோவில்களில், குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சிறப்பு யாக பூஜை நடந்தது. குரு பெயர்ச்சியை முன்னிட்டு, சேலம், சீலநாயக்கன்பட்டி முருகானந்த சாது சபை மடாலயத்தில், குரு பகவான் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று மாலை 6.27 மணிக்கு, குரு பகவான் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியானார். அப்போது, தட்சிணாமூர்த்தி திருக்கோவில் இறைபணி மன்ற கமிட் டிசார்பாக, குரு பெயர்ச்சி சிறப்பு யாகம் நடந்தது. 108 கலசங்களுக்கு பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம் நடந்தது. சந்தன காப்பு அலங்காரத்தில் தட்சிணாமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இன்று காலை 8 மணிக்கு, குரு பகவானுக்கு தங்க கவசம் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. யாக பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பால், பழம், பன்னீர், நெய், தயிர், புஷ்பங்கள், இளநீர், சந்தனம் ஆகியவைகளை வழங்கினர். குரு பகவான் சன்னதியில், இன்று காலை முதல் மாலை வரை, ஏழு ராசிக்காரர்களுக்கு, சிறந்த அர்ச்சகர்களை கொண்டு உரிய பரிகாரங்கள் செய்யப்படுகிறது.
* சேலம், கோரிமேடு, என்.ஜி.ஜி.ஓ., காலனியில் உள்ள வைஷ்ணவி அங்காளம்மன் ருத்ரேஸ்வரர் கோவிலில், நேற்று குரு பெயர்ச்சி யாக பூஜைகள் நடந்தன. நேற்று, இங்கு நடந்த குரு பெயர்ச்சி யாக பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுகவனேஸ்வரர் கோவில் உள்பட பெரும்பாலான சிவாலயங்களிலும் குருபெயர்ச்சி யாக பூஜைகள் நடந்தன.