பதிவு செய்த நாள்
02
செப்
2020
05:09
நாகப்பட்டினம் : வேளாங்கண்ணி மாதா தேவாலயம், நாகூர் தர்கா திறக்கப்படாததால், பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக, மூடப்பட்ட வழிபாட்டு தலங்கள், வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, நேற்று முதல் திறக்க, தமிழக அரசு உத்தரவிட்டது. நாகையில் பெரும்பாலான வழிபாட்டு தலங்கள் திறக்கப்பட்டன.ஆனால், ஆரோக்கிய மாதா தேவாலயம், நாகூர் தர்கா நேற்று திறக்கப்படவில்லை. வழிபாட்டுக்காக வந்த பக்தர்கள், ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். வேளாங்கண்ணி தேவாலயத்தில், ஆண்டு திருவிழா கடந்த, 29ம் தேதி துவங்கி வரும், 8ம் தேதி வரை நடக்கிறது. தேவாலயத்தை திறந்தால் பக்தர்கள் அதிகளவில் வருவர். அவர்களை எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசித்த பிறகே தேவாலயம் திறக்கப்படும் என, மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.நாகூர் தர்காவில் பராமரிப்பு பணிகள் நடப்பதால், இன்று திறக்கப்படும் என, தர்கா மேலாளர், ஜெகபர்உசேன் தெரிவித்தார்.