கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் வளாகம், வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறியுள்ளதால், பக்தர்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
கிணத்துக்கடவு பிளேக் மாரியம்மன் கோவில் மிகவும் பழமையானது. கோவிலில் செவ்வாய், வெள்ளி மற்றும் பவுர்ணமி, அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடக்கிறது. தினமும், காலை மற்றும் மாலை நேரத்தில் பக்தர்கள் அம்மனை வழிபடுகின்றனர். கோவில் வளாகத்தில், வாடகைக்கு செல்லும் பெரிய வாகனங்கள் மற்றும் டெம்போ, கார் போன்ற வாகனங்கள் நிறுத்தப்படுகிறது. கோவில் நுழைவுவாயிலில் ஆட்டோக்களை நிறுத்தியுள்ளதால், பக்தர்கள் உள்ளே வந்து செல்ல சிரமமாக உள்ளது. மேலும், பக்தர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாமல் அவதிப்படுகின்றனர். கோவில் நுழைவுவாயிலில் குப்பை கொட்டப்பட்டு வருவதால், துர்நாற்றம் வீசி வருகிறது.கடந்த இரண்டு வாரங்களாக கோவில் திறக்கப்பட்டு, பூஜைகள் நடந்து வருகிறது. இதனால், வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை வெளியே நிறுத்தவும், குப்பையை அகற்றவும் பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும், என, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.