மதுரை கிண்ணிமங்கலத்தில் முதல் பள்ளிப்படை கோவில்
பதிவு செய்த நாள்
03
செப் 2020 01:09
சென்னை : தமிழகத்தின் முதல் பள்ளிப்படை கோவில் எழுப்பப்பட்டது, கிண்ணிமங்கலத்தில் தான் என, தொல்லியல் துறை தெரிவித்துள்ளது.
நாடே கொரோனா ஊரடங்கில் முடங்கிக் கிடந்தபோது, வரலாற்று ஆர்வலர்கள், தமிழக வரலாற்றின் முக்கிய தடயங்களை, மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் கோவிலில், சில வாரங்களுக்கு முன் கண்டறிந்தனர். அவை, தமிழி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகள். அதாவது, எட்டுப்பட்டை வடிவ துாண் கல்வெட்டில், எகன் ஆதன் கோட்டம் என, தமிழியில் எழுதப்பட்டிருந்தது. வட்டெழுத்துக் கல்வெட்டில், இறையிலி ஏகநாதன் பள்ளிப்படை மண்டளியீந்தார் என, எழுதப்பட்டுள்ளது.
ஆய்வு : இதைத் தொடர்ந்து, தமிழக தொல்லியல் துறை துணை இயக்குனர் சிவானந்தம் தலைமையில், முன்னாள் தொல்லியல் அலுவலர்கள் சாந்தலிங்கம் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர், அங்கு ஆய்வு செய்தனர்.இதுகுறித்து, சிவானந்தம் கூறியதாவது:தமிழி கல்வெட்டில், எ, ன், ட், ம் என்னும், நான்கு எழுத்துக்களின் மேல் புள்ளி வைக்கப்பட்டிருந்ததை கண்டறிந்தனர். எழுத்து வகையை வைத்து, அக்கல்வெட்டு, கி.மு., இரண்டாம் நுாற்றாண்டுக்கும், முதலாம் நுாற்றாண்டுக்கும் இடைப்பட்டது என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.
43 வரிகள் : வட்டெழுத்துக் கல்வெட்டில் உள்ள எழுத்து வகையை வைத்து, அவை, கி.பி. 7 - 8ம் நுாற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கும் என, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இக்கல்வெட்டில் பள்ளிப்படை என்ற சொல், முதன்முதலாக வந்துள்ளதால், மதுரை மாவட்டம், கிண்ணிமங்கலம் பள்ளிப்படையே, தமிழகத்தின் முதல் பள்ளிப்படை என, முடிவு செய்யப்பட்டு உள்ளது.தொடர்ந்து ஆய்வு செய்தபோது, அங்கு, 1722ம் ஆண்டில் ஆட்சி செய்த, விஜயரங்க சொக்கநாதன் காலத்தைச் சேர்ந்த, பலகைக் கல்லில், ஒரு கல்வெட்டு கண்டறிந்தனர்.
அதில், சுப ஸ்ரீமன் மகா மண்டலீஸ்வரன் எனத் துவங்கி, சிவ சன்னதியில் விளக்கை நிறுத்தியவன் போற பாவத்துக்குள்ளாவன் என, 43 வரிகளில் தமிழ் எழுத்துக்கள் உள்ளன. இதில், பள்ளிப்படை சமாதிகள் என்ற சொல் இடம்பெற்றுள்ளது. இந்த கோவில், ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினருக்கு சொந்தமான பள்ளிப்படை கோவிலாகவும், மடமாகவும் உள்ளது, இக்கல்வெட்டில் விளக்கப்பட்டுள்ளது.பள்ளிப்படைஅதாவது, தமிழி கல்வெட்டில், கோட்டம் என்ற சொல், முதன்முதலில் பயன்படுத்தப்பட்டு உள்ளது.
இந்த துாண், முதன்முதலில், நீத்தோர் நினைவாக எழுப்பப்பட்ட நினைவுத் துாணாக இருக்கலாம்.அதையடுத்து வரும் வட்டெழுத்து, விஜயநகர மன்னர்கள் மற்றும், 1942ல் வெட்டப்பட்ட கல்வெட்டு ஆகிய அனைத்திலும், இக்கோவில் ஜீவசமாதி, பள்ளிப்படை என்ற சொற்களிலேயே வந்து உள்ளது. அதனால், தமிழகத்தில், வேறு எங்கேனும், இதற்கு முன்பான கல்வெட்டு கண்டறியும் வரை, மதுரை, கிண்ணிமங்கலத்தில் தான், முதல் பள்ளிப்படை கோவில் எழுப்பப்பட்டுள்ளது என்பதை, உறுதியாக சொல்லலாம்.இவ்வாறு, அவர் கூறினார்.
|