மகாசுவாமிகளை தரிசிக்க காஞ்சிபுரம் மடத்திற்கு வந்தார் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஒருவர். ‘‘சுவாமி... எவ்வளவோ பேருக்கு பாடம் கற்றுத் தருகிறோம். ஆனால் படிப்பின் பலனாக யாரும் ஒழுக்கம், கட்டுப்பாட்டை பின்பற்றுவதாக தெரியவில்லையே? பணம் சம்பாதிப்பது மட்டும் படிப்பின் பலனா’’ என கேட்டார். அவரிடம் சுவாமிகள், ‘‘அடக்கத்தை கற்றுத் தராதது படிப்பு ஆகாது. அடக்கம் என்றால் பணிவு மட்டுமின்றி புலனடக்கமும் சேர்ந்ததுதான். ஆனால் படிப்பாளிகளைப் பார்த்தால் படிப்புக்கும், அடக்கத்திற்கும் சம்பந்தம் இல்லையோ எனத் தோன்றுகிறது. படித்தவர்களிடம் நல்ல குணம் அதிகம் வெளிப்பட வேண்டும். ஆனால் நடைமுறையில் அப்படி தெரியவில்லை. படிக்காத மலைஜாதி மக்களிடம் தீய குணங்கள் குறைவாகவே உள்ளது. போலீஸ் ஸ்டேஷன், கோர்ட் எல்லாம் அவர்களுக்கு தேவைப்படுவதில்லை. ஏனென்றால் அவர்களிடம் குற்றங்கள் குறைவு. பள்ளிக்கூடம், கல்லுாரி அதிகம் இருக்குமிடத்தில் தான் வழக்குகள் அதிகம் நடக்கின்றன. அதுவும் கிரிமினல் குற்றங்கள், ஏமாற்று வித்தைகள், திருட்டுக்கள் எல்லாம் படித்தவர்கள் வாழும் நகரங்களில் அதிகம். நினைத்துப் பார்த்தால் வேடிக்கையாக இருக்கிறது? முன்னை விட இந்த காலத்தில் படிப்பு வளர்ந்திருக்கிறது. எல்லோரும் பள்ளியில் படிக்கிறார்கள். தற்காலத்தில் இடமில்லாததால் ‘ஷிப்ட்’ முறையில் பாடம் நடத்துகிறார்கள். இவ்வளவு இருந்தும் படிப்பின் பலனாக ‘விநயம்’ (அடக்கம்) ஏற்படவில்லையே? அதுவும் பெண்களின் இயல்பான குணம் அடக்கம். படித்த பெண்களுக்கு அடக்கம் இன்னும் அதிகம் இருக்க வேண்டும். ஆனால் அவர்களுடைய இயல்பையே படிப்பு மாற்றுகிறது என்றால் என்ன அர்த்தம்? இப்போதைய கல்விமுறை சரியில்லை என்றே அர்த்தம். நற்பண்புகளை வளர்க்கும் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். பண்பாட்டுக் கல்வியை இணைத்து பாடத்திட்டத்தை அமைத்தால் மட்டுமே நிலைமை சீராகும்! பண்பாட்டுக் கல்வியே உண்மையான கல்வி. குருகுலக் கல்வியில் பண்பாட்டுக்கு முக்கியத்துவம் இருந்தது. நல்லொழுக்கத்தை வளர்க்காத கல்வி கல்வியே அல்ல’’ என்றார். ஆசி பெற்ற துணைவேந்தர் இயன்றதைச் செய்வதாக தெரிவித்து சுவாமிகளிடம் விடை பெற்றார்.