பதிவு செய்த நாள்
06
செப்
2020
01:09
ஓசூர்: கிருஷ்ணகிரியில் உள்ள, காட்டு வீரஆஞ்சநேயர் கோவில், ஆறு மாதத்துக்கு பின், நேற்று திறக்கப்பட்டது. பக்தர்கள் சமூக இடைவெளியுடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
கிருஷ்ணகிரியில், சேலம் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், தேவசமுத்திரத்தில், காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு வாரந்தோறும் சனிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடக்கும். இதில், தமிழகம் மட்டுமின்றி, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் இருந்தும், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வருவர். கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச், 24ல் கோவில் மூடப்பட்டு, பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், ஆகம விதிப்படி பூஜைகள் மட்டும் கோவிலில் தொடர்ந்து நடந்தன. இந்நிலையில், வழிபாட்டு தலங்களை திறக்க, தமிழக அரசு அனுமதி வழங்கியதால், சனிக்கிழமையான நேற்று காலை, காட்டு வீர ஆஞ்சநேயர் கோவில் திறக்கப்பட்டு, சுவாமிக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில், சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்த பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். கோவிலில் வளாகத்தில், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக, ஆறு மீட்டர் இடைவெளியில் வட்டங்கள் போடப்பட்டிருந்தன. கிட்டத்தட்ட ஆறு மாதத்துக்கு பின், காட்டு வீரஆஞ்சநேயர் சுவாமியை பக்தர்கள் வழிபட்டனர்.