பதிவு செய்த நாள்
06
செப்
2020
01:09
கரூர்: கரூர் நகரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில், பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவில்களை சுற்றியுள்ள கடைகளில், வியாபாரிகள் முக கவசம் அணியாமல் உள்ளதை, கோவில் நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில், ஊரடங்கு உத்தரவு வரும், 30 வரை அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த, 1ல் ஐந்து மாதங்களுக்கு பிறகு, அனைத்து மத வழிபாட்டு தலங்களும், பல்வேறு அறிவுரைகளின்படி திறக்கப்பட்டன. கரூர், குளித்தலை, வேலாயுதம்பாளையம், அரவக்குறிச்சி, க.பரமத்தி, சின்னதாராபுரம், கிருஷ்ணராயபுரம், தரகம்பட்டி உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் உள்ள கோவில்கள், அனைத்தும் திறக்கப்பட்டுள்ளன. கடந்த, ஐந்து மாதங்களுக்கு பிறகு கோவில்கள் திறக்கப்பட்டுள்ளதால், நாளுக்கு நாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், கரூரில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களான கல்யாண பசுபதீஸ்வரர், கல்யாண வெங்கடரமண சுவாமி, மாரியம்மன் கோவில் பகுதிகளில், பூஜை பொருட்களை விற்பனை செய்ய ஏராளமான கடைகள் உள்ளன. அதில், உள்ள வியாபாரிகள் பெரும்பாலும், முக கவசம் அணியாமல் உள்ளனர். மேலும், கோவில்களுக்கு செல்லும் சில பக்தர்களும் முக கவசம் அணியாமல் செல்கின்றனர். அதை, கோவில் நிர்வாக அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் உள்ளனர்.