பதிவு செய்த நாள்
19
மே
2012
03:05
ஒரிஸ்ஸாவில் பண்டித கோப பந்துதாஸ் என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தன்னலமற்று பொது சேவை செய்வதே தன் வாழ்வின் லட்சியமாக கொண்டிருந்தார்.
ஒரு முறை இவரது ஊரில் இடி மின்னலுடன் அடைமழை பெய்து கொண்டிருந்தது. இரவு நெருங்கியது. மழையும் விட்டபாடில்லை. அதோ வருகிறாரே, அவர் வெள்ளத்தில் சிக்கிய அக்கம்பக்கத்து ஊர்களில் நிவாரணப் பணிகளை முடித்துவிட்டு இப்போதுதான் வீடு திரும்புகிறார். ஆனால் அவர் வீட்டிலோ சோகம் குடிகொண்டு இருந்தது. அவரது மகன் தாயின் மடியில் துவண்டு கிடந்தான். அவ்வப்போது இருமுவான். தாயின் கண்ணீர் உலரவேயில்லை. மருந்து மாயம் எல்லாம் செய்து பார்த்து விட்டார்கள். எல்லாம் பயனற்று போய் விடுமோ என்கிற நிலை. வெளியே மழையும் காற்றும் சுழன்று சுழன்று அடித்துக் கொண்டிருப்பதைப் போலவே அவரது உள்ளத்திலும் சூறாவளி வீசிக் கொண்டிருந்தது. மனப்போராட்டம் வலுத்தது. மகனின் இருமல் ஒலி, ஒரு காதில் அறைந்தது என்றால், வெள்ளத்தில் அடிபட்ட ஆயிரமாயிரம் மக்களின் அவலக் குரல் மறுகாதில் வந்து அறைந்தது. இந்நேரம் அந்த ஆதரவற்ற எளிய மக்களின் கதி என்ன ஆயிற்றோ? இறுதியில் கடமையே பாசத்தை வென்றது.
கையில் குடையை எடுத்தார். வாசல் கதவைத் திறக்கப் போனார். மனைவியார் தடுத்தார். எங்கே புறப்பட்டு விட்டீர்கள்? குழந்தை வாய் ஓயாமல் இருமிக் கொண்டிருக்கிறான். இனியும் என்னால் சகித்துக் கொள்ள முடியாது என்று முறையிட்டார்கள். நான் என்ன செய்வது? மருந்து கொடுத்தாயிற்று. அப்புறம் எல்லாம் இறைவன் திருவுள்ளப்படி நடக்கும். வெளியே ஏராளமான குழந்தைகள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களின் தவிப்பு என்னை இழுக்கிறது. கடவுள் விட்ட வழி என்று கூறியபடி புறப்பட்டுப் போய்விட்டார் மனிதர். குழந்தையும் கடைசியாக ஒருமுறை இருமிவிட்டு தாயின் மடியிலேயே உயிரை விட்டு விட்டது. அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் இச்செய்தியை அவரிடம் போய்ச் சொன்னார்கள். அப்போது அவர் சொன்னார் : இது இறைவன் திருவுள்ளம். இவர் தான் பண்டித கோப பந்துதாஸ். உத்தகலமணி என்று ஒரிஸ்ஸா முழுவதும் இன்று இவரை நன்றியோடு நினைத்துப் போற்றுகிறது.