எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் 25 ஆண்டுகளுக்குப்பின் விமோசனம்: தினமலர் செய்தி எதிரொலி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22செப் 2020 03:09
பரமக்குடி:ராமநாதபுரம் மாவட்டம்பரமக்குடி நகராட்சி, எமனேஸ்வரம் மாமாங்க தெப்பக்குளம் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியால், 25 ஆண்டுகளுக்குப்பின் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து சீரமைக்கப்பட்டு வருகிறது. பரமக்குடி வைகை ஆற்றின் மறுகரையில், சொர்ணகுஜாம்பிகை சமேத எமனேஸ்வரமுடையவர் கோயில் உள்ளது. இங்கு எமன், ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்றதாக தலபுராணம் கூறுகிறது.இந்நிலையில் கும்பகோணம் மகாமக தீர்த்தக் குளத்திற்கு இணையாக, எமனேஸ்வரம் எமனேஸ்வரமுடையார் கோயில் எதிரில் மாமாங்க தெப்பக்குளம் உள்ளது. இது எமதீர்த்தம் என அழைக்கப்படுகிறது. இக்குளம் 25 ஆண்டுகளாக துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கி வந்தது. அப்பகுதியில் நீரூற்று பாதிக்கப்பட்டதுடன், பக்தர்கள் மனவேதனை அடைந்து வந்தனர். குளக்கரையில் சிறிய அளவில் சிமென்ட் தொட்டி அமைக்கப்பட்டு அதில் சுவாமி தீர்த்தவாரி நடந்தது. இதுகுறித்து தினமலர் நாளிதழ் தொடர்ந்து சுட்டிக்காட்டி வந்தது. இந்நிலையில் பரமக்குடி எம்.எல்.ஏ., சதன்பிரபாகர் எம்.எல்.ஏ., நிதியிலிருந்து, ரூ. 10 லட்சத்தை ஒதுக்கி குளத்தை துார்வாரி படித்துறைகள் கட்டி, பக்தர்கள் வசதிக்காக நடைமேடை, கம்பி வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் நிதி ஒதுக்கீடு செய்து மின்விளக்கு வசதிகள் மற்றும் கோயில் முன் மற்றுமொரு படித்துறை அமைக்க பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.