சென்னை: கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி மீட்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அரசு அறிக்கை அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிராம கோவில்களுக்காக ஒதுக்கப்படும் 10 கோடி ரூபாயை செலவிடும் வழிமுறைகள் என்ன என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. திருச்சி ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் தாக்கல் செய்த மனு: கிராமப்புறங்களில் உள்ள கோவில்களை சீரமைப்பதற்காக திருச்செந்துார் முருகன் கோவில் பழனி தண்டபாணி கோவில் உள்பட 20 பெரிய கோவில்களின் உபரி வருவாயில் இருந்து 10 கோடி ரூபாய் ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
அறங்காவலர்களின் ஒப்புதல் பெற்று பொது மக்கள் கருத்து கேட்டு அதன் அடிப்படையில் தான் நிதி எடுப்பது குறித்து முடிவு செய்ய வேண்டும். எனவே அரசு உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது. ஆலய வழிபாட்டு சங்கத்தலைவர் டி.ஆர்.ரமே ஷ் தாக்கல் செய்த மனுவில் ‘அறங்காவலர்கள் இன்றி கோவில்களின் நிதியை மாற்றுவதற்கும் பயன்படுத்துவதற்கும் அரசுக்கு தடை விதிக்க வேண்டும். கோவில்களில் நடந்த நிதி முறைகேடு குறித்து விசாரணை நடத்த வேண்டும்’என கூறப்பட்டுள்ளது. ரமே ஷ் தாக்கல் செய்த மனுவுக்கு அறநிலைய துறை சார்பில் ஏற்கனவே பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதையடுத்து ரங்கராஜன் நரசிம்மன் மனுவுக்கு அறநிலைய துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனு: கிராமப்புறங்களில் உள்ள 1000 கோவில்களில் திருப்பணி மேற்கொள்ள 10 கோடி ரூபாய் வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் அறிவித்தார். வருமானம் வரும் கோவில்களின் உபரி நிதியை பயன்படுத்திக்கொள்ள அரசும் அனுமதி வழங்கி உள்ளது. பயன் பெறும் கோவில்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்டது.
ஒரு கோவிலுக்கு ஒரு லட்சம் ரூபாய் செலவில் பணிகளை மேற்கொள்ள அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. உபரி நிதியை பயன்படுத்துவதற்கானதிட்டங்களை அனுப்பும்படி 18 பெரிய கோவில்களுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் கூறப்பட்டுள்ள விதிமுறைகளை கை விடவில்லை. கிராம கோவில்களுக்காக ஒதுக்கப்படும் நிதி முதல்வர் நிவாரணநிதிக்கு செல்ல வில்லை. அதிகாரிகளை துன்புறுத்தும் விதமாக நம்ப முடியாத கதைகளை கண்டுபிடித்து நீதிமன்றத்தின் நே ரத்தை மனுதாரர் வீணடிக்கிறார். இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது. இவ்வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் ஹேமலதா அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரரான ரங்கராஜன் நரசிம்மன் ‘‘சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றாமல் உபரி நிதியை நேரடியாக வழங்க முடியாது’’ என்றார். அதற்கு அறநிலையதுறை சார்பில் சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ஆஜராகி ‘‘சட்டத்தில் கூறியுள்ள விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன’’என்றார். அப்போது நீதிபதிகள் ‘கிராம கோவில்களுக்கு ஒதுக்கப்படும் 10 கோடி ரூபாய் எப்படி செலவிடப்பட உள்ளது; அதற்கான வழிமுறைகள் என்ன’ என கேட்டனர். அதுகுறித்து பதில் அளிப்பதாக சிறப்பு பிளீடர் தெரிவித்தார். இதையடுத்து விசாரணையை வரும் 24ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர். இதற்கிடையில் கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள் ; அவற்றில் உள்ள ஆக்கிரமிப்புகள் ; அதை அகற்ற மீட்க எடுக்கப்ப ட்ட நடவடிக்கைகள் ; ஆக்கிரமிப்புகளை அகற்றாத அதிகாரிகளுக்கு எதிராக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க நீதிபதிகள் சத்தியநாராயணன் சேஷசாயி அடங்கிய அமர்வு உத்தரவிட்டிருந்ததை மனுதாரர்கள் தரப்பில் சுட்டிக்காட்டினர். அதற்கு சிறப்பு பிளீடர் கார்த்திகேயன் ‘‘எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இடைக்கால அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பதில் அளிக்கிறேன்’’ என்றார். இதையடுத்து நீதிபதி சத்தியநாராயணன் தலைமையிலான அமர்வு பிறப்பித்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.