பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழா: எல்லை கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21மே 2012 11:05
கடலூர்:கடலூர், திருப்பாதிரிப்புலியூர் பாடலீஸ்வரர் கோவில் வைகாசிப் பெருவிழாவையொட்டி எல்லைக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சியையொட்டி கடந்த17ம் தேதி ஸ்ரீ வண்ணார மாரியம்மன் திருவிழா துவங்கியது. நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு திருப்பாதிரிப்புலியூர் சோலை வாழியம்மன் கோவில் நிர்வாகம் மார்க்கெட் காலனி மக்கள் சார்பில் எல்லைக் கட்டுதல் நிகழ்ச்சி நடந்தது.அதனையொட்டி நேற்று முன்தினம் நள்ளிரவு சன்னதி தெரு-தேரடி தெரு சந்திப்பில் வண்ணார மாரியம்மனுக்கு பூஜை நடந்தது. பின்னர் பிடாரி அம்மனுக்கு பலி கொடுக்கப்பட்டது. தொடர்ந்து அங்கு திரண்டிருந்த இளைஞர்கள் கையில் தீப்பந்தம், அரிவாளுடன் அண்ணா பாலம், வண்டிப்பாளையம் ரோடு ரயில்வே மேம்பாலம் சந்திப்பு, கூத்தப்பாக்கம் கான்வென்ட் மற்றும் கம்மியம்பேட்டை ரயில்வே கேட் வரை ஓடிச் சென்று எல்லை கட்டினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முதல் ஒருவர் நான்கு நாட்களுக்கு அரிவாளுடன் நான்கு சாலைகளிலும் வலம் வருவார். ஐந்தாம் நாள் புற்று மண் எடுத்து கொடுத்த பின் வரும் 26ம் தேதி பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கொடியேற்றப்படுகிறது. அதனைத் தொடர்ந்து தினமும் இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நடக்கிறது. வைகாசி பெருவிழா வரும் ஜூன் மாதம் 7ம் தேதி வரை நடக்கிறது. விழாக் காலங்களில் வேதபாராயணம், தேவாரம், நாதஸ்வரம் மற்றும் இன்னிசை கச்சேரிகள் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் மேனகா மற்றும் இந்து சமய அறநிலைய ஆட்சித் துறை உதவி ஆணையர் பரணிதரன் செய்து வருகின்றனர்.