உலகளந்த பெருமாள் கோவில் தரிசன நேரம் மாற்றியமைப்பு!
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2012 10:05
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் வைகானச ஆகம முறைப்படி நடை திறப்பது மற்றும் பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முதல் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவில் ஒன்று. இக்கோவிலில் நடை திறப்பது மற்றும் பூஜை நேரங்கள் மாற்றி அமைக்கப் பட்டுள்ளது. அதிகாலை 5.45 மணிக்கு சன்னதி திறக்கப்பட்டு மூலவர் விஸ்வரூப தரிசனம். 7.45 மணி முதல் 9.30 மணி வரை மூலவருக்கு திருவாராதனம், திருப்பாவை சாற்றுமறை நடந்து வருகிறது. இந்த நேரங்களில் நடை அடைக்கப்பட்டு பக்தர்களின் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். காலை 9.30 மணி முதல் பகல் 12.30 மணி வரை பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்படுவர். பின்னர் கோவில் அடைக்கப்பட்டு மாலை 4 மணிக்கு திறக்கப்படும். மாலை 5.45 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். அதன் பிறகு 7.15 மணி வரை நித்யானம் சந்தானம், சாற்றுமறை மற்றும் பூஜைகள் நடைபெறும். இந்த நேரத்தில் பக்தர்கள் தரிசனம் நிறுத்தி வைக்கப்படும். இரவு 8.30 மணிக்கு சாற்றுமறை முடிந்து கோவில் நடை அடைக்கப்படும். காலை 7.45 மணி முதல் 9.30 மணி வரையும், மாலை 5.45 மணி முதல் 7.15 வரையும் மூலவர் பெருமாள் சன்னதி பூஜைகளுக்காக அடைக்கப்பட்டிருக்கும். வைகானச ஆகம முறைப்படி, தென்னாச்சாரிய சம்பர்தாயத்தை பின்பற்றி இந்த நடைமுறையை கோவில் நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. தாயார் சன்னதி வழக்கம்போல் திறந்திருக்கும். இத்தகவலை முரளி சுவாமிகள் தெரிவித்தார்.