பதிவு செய்த நாள்
28
அக்
2020
05:10
நீதி தெய்வமான காளி திருச்சூர் அருகிலுள்ள கொடுங்ஙல்லுாரில் பகவதி அம்மனாக வீற்றிருக்கிறாள். கொடுங்ஙல்லுார் அம்மா என அழைக்கப்படும் இந்த அம்மனை நவராத்திரியில் வழிபடுவது சிறப்பு.
கண்ணகியை திருமணம் செய்த கோவலன், மாதவி மீது கொண்ட காதலால் செல்வத்தை இழந்தான். அதன்பின், பிழைப்பு தேடி மதுரைக்கு வந்தான். அங்கு மனைவியின் கால் சிலம்பை விற்கச் சென்றான். அந்த சமயத்தில் பாண்டிய அரசியின் சிலம்பு காணாமல் போயிருந்தது. அதைக் களவாடிய குற்றம் கோவலன் மீது சுமத்தப்பட்டது. மன்னரின் உத்தரவால் கோவலன் கொலை செய்யப்பட்டான். கணவர் இறந்ததை அறிந்த கண்ணகி நீதி கேட்டு மதுரையை எரித்தாள். பின் சேர நாட்டுக்கு வந்தாள். கற்பு தெய்வமான அவளுக்கு, சேரன் செங்குட்டுவன் கோயில் எழுப்ப, பகவதி அம்மனாக மக்கள் வழிபட்டனர். அதுவே கொடுங்ஙல்லுார் பகவதி அம்மன் கோயிலாகத் திகழ்கிறது.
கேரள தேசத்தை உருவாக்கிய பரசுராமரை அசுரனான தாருகன் துன்புறுத்தினான். சிவபெருமானின் உதவியை பரசுராமர் கேட்க, அவர் பராசக்தியான காளியை வழிபடுமாறு தெரிவித்தார். அதன்படி பரசுராமர் காளிக்கு கட்டிய கோவிலே கொடுங்ஙல்லுார் பகவதி கோயிலாக உள்ளது.
எட்டு கைகள், பெரிய கண், சிறிய இடை, கோபமான முகம், வலது காலை மடக்கி இடது காலை தொங்கவிட்டு, அமர்ந்த கோலத்தில் வடக்கு நோக்கி அம்மன் காட்சி தருகிறாள். கையில் அசுரனின் தலை, வாள், மணி, சிலம்பு உள்ளது. ஏழடி உயரம் கொண்ட அம்மன் சிலை பலா மரத்தால் ஆனது. இதனை ‘வரிக்க பிலாவு’ என குறிப்பிடுவர். ‘சாந்தாட்டம்’ என்ற சந்தன அபிஷேகம் மட்டும் அம்மனுக்கு நடக்கும். சிவன் கிழக்கு நோக்கிய சன்னிதியில் இருக்கிறார். ஒரே இடத்தில் நின்று பகவதி, சிவனை வணங்கும் விதத்தில் கோயில் கட்டப்பட்டுள்ளது. சிவனை விட அம்மனுக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பத்து ஏக்கர் பரப்பு கொண்ட இக்கோயிலில் விநாயகர், வீரபத்திரர், சப்தமாதர் சன்னிதிகளும் உள்ளன.
சிலப்பதிகார காலத்திலேயே கோயில் கட்டப்பட்டதாக கல்வெட்டு கூறுகிறது. அம்மனை தாயாகக் கருதி, வீட்டில் நடக்கும் சுபநிகழ்ச்சியின் போது முதல் மரியாதை செய்கின்றனர். ஆதி காலத்தில் பகவதி உக்கிரமாக இருந்த போது உயிர்ப்பலி, கள் நைவேத்யம் இங்கிருந்தது. பிற்காலத்தில் ஆதிசங்கரர் யந்திர பிரதிஷ்டை செய்து அம்மனை சாந்தப்படுத்தினார். உயிர்ப்பலிக்கு பதிலாக குருதி பூஜையை குங்குமத்தாலும், கள்ளிற்கு பதிலாக இளநீர் படைக்கும் முறையும் ஏற்படுத்தப்பட்டது. அம்மை நோய் தீர வைசூரி சமாதியில் மஞ்சள்பொடி வைத்து வழிபடுகின்றனர். குழந்தைபேறுக்காக துலாபார வழிபாடு செய்கின்றனர்.
எப்படி செல்வது: திருச்சூரில் இருந்து 50 கி.மீ.,
விழா நாட்கள்: நவராத்திரி சிறப்பு அலங்காரம், பூஜை, தைமாதம் ‘தாலப்பொலி’ உற்ஸவம்,
நேரம்: அதிகாலை 4.00 – 12.00 மணி , மாலை 4.00 – 8.00 மணி.
தொடர்புக்கு: 0480– 280 3061
அருகிலுள்ள தலம்: குருவாயூர் கிருஷ்ணர் கோயில் 48 கி.மீ.,