பதிவு செய்த நாள்
03
நவ
2020
06:11
ஆர்.கே.பேட்டை; நெல்லிக்குன்றம், வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி மலைக்கோவிலில், நேற்று, கிருத்திகை உற்சவம் கோலாகலமாக நடந்தது. திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.ஆர்.கே.பேட்டை அடுத்த, அத்திமாஞ்சேரிபேட்டை, நெல்லிக்குன்றம் மலை மீது அமைந்துள்ளது வள்ளி, தெய்வானை உடனுறை சுப்ரமணிய சுவாமி கோவில். இந்த கோவிலில், கிருத்திகை உற்சவம் நடைபெற்று வருகிறது.ஐப்பசி மாத கிருத்திகையை ஒட்டி, நேற்று, காலை, 10:00 மணிக்கு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம், நடைபெற்றது. மாலை, 6:00 மணிக்கு உற்சவர் உள்புறப்பாடு எழுந்தருளினார்.திரளான பக்தர்கள், கந்த சஷ்டி கவசம் படித்தபடி, உடன் வலம் வந்தனர். மூன்று முறை மலைக்கோவிலை வலம் வந்த உற்சவர், பின், வசந்த மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஆர்.கே.பேட்டை, அத்திமாஞ்சேரிபேட்டை, கொடிவலசா, கொத்தகுப்பம், பாத்தகுப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.