பதிவு செய்த நாள்
28
மே
2012
10:05
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே கிராமத்தில் நடந்த கோவில் திருவிழாவில், இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடந்தது. ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கிராமங்களில் முன்னர் பெண்ணிற்கு, மாப்பிள்ளை தேர்வு செய்யும்போது, அந்த வாலிபர் இளவட்டக்கல் எனப்படும், மாப்பிள்ளை கல்லை முழுமையாக, கீழே போடாமல் தூக்கினால் தான், அவருக்கு அந்தப்பெண் கிடைக்கும். இதற்காக, இளைஞர்களிடையே கடும்போட்டி இருந்தது. மாப்பிள்ளையின் உடல்வலிமை, மனவலிமையை பரிசோதித்து பார்ப்பதற்காக, கிராம பெரியவர்களால், இம்முறை அப்போது கையாளப்பட்டது. தமிழர்களின் இந்த பாரம்பரியம் தற்போதைய நவீன காலத்தில் கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துவருகிறது.
இன்னும் பழசை மறக்காத கிராமம்: இந்நிலையில், தூத்துக்குடிமாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள அயன்வடமலாபுரம் கிராமத்தில் அம்மன் கோவில் திருவிழாவில், இளவட்டக்கல் தூக்கும்போட்டி நடந்தது. இதில், ஏராளமானோர் கலந்து கொண்டனர். 110 கிலோ எடையுள்ள இந்த உருண்டை வடிவ கல்லை, முழுவதுமாக மேலே தூக்கி பின்புற முதுகுப்பகுதி வழியாக கீழே போட்ட வாலிபர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. ஆர்வமிகுதியில் பெண்களும், இந்த கல் தூக்கும்போட்டியில் கலந்து கொண்டனர். அவர்களுக்கு ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. இங்கு, ஆண்டுதோறும் கோவில் திருவிழாவில், இந்த இளவட்டக்கல் தூக்கும்போட்டி நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.